பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66என் அமெரிக்கப் பயணம்


கார் செல்லும் நேர்வழிகள் முடக்கப் பெற்றிருந்ததால் சில கல் தொலைவு சுற்றிக் கொண்டு சென்று அந்த இடத்தை அடைய வேண்டியதாயிற்று. இந்தப் போர்க் கப்பலைப் பார்க்க ஏராளமான மக்கள் கார்களில் வருவதால் அருகில் கார்கள் நிறுத்த இடவசதிகள் செய்யப்பெறவில்லை. சற்றுத் தொலைவில் இரண்டு மூன்று தெருக்களைத் தாண்டிக் கார்களை நிறுத்த கட்டணங்களைப் பெற்று வசதிகளைச் செய்து வருகின்றன சில நிறுவனங்கள். எங்களைக் கப்பல் இருக்கும் இடத்தில் இறக்கிவிட்டு என் மகன் 20 டாலர் கட்டணம் செலுத்தி கார்கள் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு எங்களிடம் வந்து சேர்ந்தான்.

மகன் திரும்பிய பிறகு நாங்கள் கட்டணங்கள் வாங்கும் இடத்திற்குச் செல்கின்றோம். பெரியவர்கட்கு 13 டாலர்; முதியோருக்கு 9 டாலர்; சிறுவர் கட்கு 4 டாலர் என்ற விளம்பரம் இருந்தது. இதன்படி என் மகனுக்கும் மருமகளுக்கும், எனக்கும் என் மனைவிக்குமாக நான்கு நுழைவாயில் சீட்டுகள் வாங்கிக் கொண்டு வருகின்றோம். பல வாயில்களைக் கடந்து கப்பல்கள் இருக்கும் இடத்தை நோக்கி வருகின்றோம். மூன்று கப்பல்கள் நம் கண்ணில் படுகின்றன.

(1) யு.எஸ்.எஸ். இன்ட்ரெபிட் (சிவி எஸ்-11) என்ற போர் விமானங்கள் தாங்கியுள்ள கப்பல். இஃது இடப்புறமாக ஹட்சன் ஆற்றில் மிதவையாக அமைந்துள்ளது3.

(2) யு.எஸ்.எஸ். குரோவ்லர். நாசம்புரியும் ஏவுகணைகளை இயக்கும் நீர்மூழ்கிக் கப்பல்4.

(3) யு.எஸ்.எஸ். எட்சன் என்ற அழிபடைக்கருவி5.

இவை பற்றிய சில விவரங்கள்

(1) யு. எஸ். எஸ். இன்ட்ரெபிட் (சிவிஎஸ்-11): அமெரிக்க ஐக்கிய நாட்டு இன்ட்ரெபிட் 1943-ஆகஸ்டு 16-இல் தயாராயிற்று. இது இரண்டாம் உலகப் பெரும்போரில் பசிபிக் மாக்கடலில் நடைபெற்ற எண்ணற்ற போர் முற்றுகையில் பங்கு கொண்டு குண்டுகட்கும் ஏவுகணைத்6 தாக்குதலுக்கும் தப்பியது. 1960-களில் நடைபெற்ற விண்வெளிப் போட்டிப் பந்தயங்களில்7 இன்ட்ரெபிட் நாசாவுக்கு8 முக்கிய திரும்பப்பெறும் கலனாகச் செயற்பட்டது. வியட்நாம் போரில் மூன்று முறை செயற்பட்ட பிறகு, பனிப்போர் காலத்தில்9 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கும் கருவிகளைக் கொண்டு தாக்கும்


3. U.S.S. Intrepid Cvs-11. 4. U.S.S. Growler-Guided-Missile Submarine.

5. U.S.S. Edson-Forest Sherman Class Destroyer

6. Torpedo 7. Space Race 8. NASA

9. Cold War-era)