பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பலவேறு முயற்சிகள்

113


அவர்களைக் கும்பிடுகிறேன் என்று ஒருவர் சொல்லி விழுந்து வணங்கினர். அப்படியே மற்றவர்களும் வரிசையாக விழுந்து வணங்கினார்கள். அதைக் கண்டு ஆசிரியப் பெருமான் வியந்தார்.

அவர்களில் ஒரு வயோதிகர் நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து வணங்கி எழுந்தார். "ஐயா அவர்கள் வந்ததைத் தமிழ்த் தெய்வமே இங்கே வந்துள்ளதாக நினைக்கிறோம். நாங்கள் எழுதிய விண்ணப்பத்தை ஏற்றுத் தாங்கள் இங்கே வந்தீர்களே! இப்போது வராவிட்டால் அப்புறம் எப்படியோ?” என்று சொன்னபோது எல்லோரும் அவரைத் திரும்பிப் பார்த்தார்கள். வஞ்ச நெஞ்சம் இல்லாத அவரது பேச்சில் அன்பு இருந்தது. ஆனால் மற்றவர்களோ தவறாக எண்ணிக் கொண்டார்கள்.

ரமண மகரிஷிகளின் தரிசனம்

1915-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி திருவண்ணாமலையில் ரமணாசிரமத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. அதற்குத் தலைமை தாங்க வேண்டுமென்று ஆசிரியருக்கு அழைப்பு அனுப்பினார்கள். அங்குச் சென்றால் ஸ்ரீரமணபகவானையும் தரிசித்து நலம் பெறலாம் என்ற எண்ணத்துடன் ஆசிரியர் அதற்கு ஒப்புக் கொண்டார்.

அவ்வாறே திருவண்ணாமலை சென்று ஸ்ரீரமண மகரிஷியைத் தரிசித்தார். அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கி, "நான் ஏட்டுச் சுவடிகளோடும் தமிழோடுந்தான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவற்றைப் பதிப்பிப்பது ஒன்றுதான் எனக்குத் தெரியும். என்றாலும் எனக்குப் போதிய மனச்சாந்தி இல்லை. கிருபை பண்ண வேண்டும்" என்று வேண்டினார்.

ஸ்ரீ ரமண பகவான், "நீங்கள் செய்வது உலகுக்கு உபகாரமான காரியம். நீங்கள் சொந்தத்திற்கு எதையும் செய்யவில்லையே! பிறருக்குப் பயன்படும் காரியங்களைச் செய்வதில் தவறில்லை. அதுவே சிறந்த யோகம். உங்களது அரிய தொண்டால் எத்தனையோ பேர் தமிழ் அறிவு பெறுவார்கள். இதுவும் ஒருவகைத் துறவுதான்' என்று சொல்லி ஆசீர்வாதம் செய்தார்.