பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. மாணவர் நன்றி

வாழ்த்து மடல்

1919-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31-ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு விழா நடந்தது. ஆசிரியப்பெருமானுடைய உருவப்படத்தை அங்கே திறந்து வைத்தார்கள். அதற்கு, நீதிபதியாக இருந்த டி. வி. சேஷகிரி ஐயர் அவர்கள் தலைமை வகித்து அந்தப் படத்தைத் திறத்து வைத்தார். ஆசிரியப் பெருமானும் அங்கே சென்றிருந்தார்.

அப்போது அவருக்கு அங்கே ஒரு வாழ்த்துரை வழங்கப் பெற்றது. அந்த வாழ்த்துரையில் மாணவர்கள் தங்களுடைய உணர்ச்சியையும், ஆசிரியரால் பெற்ற நன்மையையும் எடுத்துக் காட்டியிருந்தார்கள். ஆசிரியர் பதிப்பித்த தமிழ் நூல்களைத் தமிழ் அன்னையின் ஆபரணங்களாக வருணித்து இருந்தார்கள். அதோடு ஆசிரியர் பாடம் சொல்லும்போது ஆங்கில ஆசிரியரிடம் அடங்கியிருந்ததைப்போலத் தாங்கள் அடங்கிப் பாடம் கேட்ட செய்தியைச் சொல்லியிருந்தார்கள்.வேறு மொழி பயிலும் மாணவர் களும் கூட ஒய்வு இருக்கும்போது தமிழ் வகுப்புக்கு வந்து ஆசிரியர் பாடம் சொல்வதைக் கேட்டு மகிழ்ந்த அற்புதத்தை அந்த வாழ்த்து மடலில் குறித்திருந்தார்கள், ஏறக்குறைய 40 ஆண்டுகள் இந்தக் கல்லூரியில் தாங்கள் தமிழாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தங்களிடம் பாடம் கேட்கக் கொடுத்து வைத்திருந்த இந்தத் தலை முறை மாணவர்களுக்குக் கிடைத்த பாக்கியம் இனி யாருக்குக் கிடைக்கும்?' என்று அந்த வாழ்த்து மடல் சிறப்பாக எடுத்துக் காட்டியது.

ஆசிரியர், கல்லூரியிலிருந்து ஒய்வுபெற்ற போது, இந்து, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகள் அவரது சேவையைப் பாராட்டித் தலையங்கங்கள் எழுதின.

1919-ஆம் ஆண்டு சிலப்பதிகாரத்தின் இரண்டாம் பதிப்பிற் குரிய வேலைகள் நடந்து வந்தன. ஏதேனும் நூலை மறு முறை பதிப்பிக்கும்போது ஆசிரியர் பின்னும் கூர்ந்து கவனம் செலுத்து வார். பதிப்புக்கள் திருத்தம் அடைந்தன. ஏற்கனவே சரியாக விளக்கம் பெருத பல புதிய பகுதிகள் அடுத்த அடுத்த பதிப்புக்களில் அமைப்பதைச் சிலப்பதிகாரம் முதலிய நூல் பதிப்புக்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்: