பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சடகோபையங்காரிடம்‌ கற்றது

77

பாட்டின் பொருள் வழியே தம்முடைய மனம் முழுவதையும் செல்லவிட்டுக் கேட்போரையும் இழுத்துச் செல்வார். ஏழாம் பிராயத்திலே அவர் சிறிது சிறிதாக ஊட்டிய தமிழமுதத்தின் சுவை இன்றும் எனக்கு மறக்கவில்லை.

முதற் பாடங்கள்

முதல் முதலில் சடகோபையங்கார் தாம் இயற்றிய ஆலந்துறையீசர் பதிகத்தை எனக்குக் கற்பித்தார். அரியிலூரிலுள்ள சிவபெருமான் விஷயமாக அமைந்தது அது. சங்கீதத்திலும் அவர் இயற்றிய கீர்த்தனமொன்றையே முதலிற் சொல்லிவைத்தார்.

“ரவிகுல தாமனே-யதுகுல சோமனே
பரமபதி மாயனே-பாண்டவச காயனே”

என்று ஆரம்பிப்பது அக்கீர்த்தனம்.

அக்கீர்த்தனம் சகானா ராகத்தில் அமைந்தது, அவர் முதலில் சொல்லித் தந்த அக்கீர்த்தனத்தோடு அதன் இராகமும் என் மனத்தைக் கவர்ந்தது. அதுமுதலே அந்த ராகத்தில் எனக்கு விருப்பம் வளர்ந்து வந்தது. இன்றும் அந்த விருப்பம் இருந்து வருகிறது.

கீர்த்தனம் பிறந்த வரலாறு

ஒரு கவிஞர் தாம் இயற்றிய செய்யுட்களையும் கீர்த்தனங்களையும் கற்பிக்கும்போது மற்றவர்களாற் சொல்ல முடியாத பல செய்திகளைத் தெரிவிப்பார். “ஒரு செய்யுள் கவிஞன் வாயிலிருந்து உதிப்பதற்கு முன் அதன் பொருளுக்குரிய கருத்து எவ்வாறு தோன்றியது? எவ்வாறு வளர்ந்தது? எவ்வாறு அதற்கு ஓர் உருவம் உண்டாயிற்று?” என்னும் வரலாறுகள் அக்கவிஞனால்தான் சொல்ல முடியும். அவை எவ்வளவோ சுவையுடையன வென்பதை யாவரும் அறிவர்.

சடகோபையங்கார் பாடம் சொல்லும்போது அவருடைய சொந்தப் பாட்டுக்களைப் பற்றிய வரலாறுகளையும் சொல்லுவார். எனக்கு முதலிற் கற்பித்த சகானா ராகக் கீர்த்தனத்தின் பிறப்பைப் பற்றியும் அவர் சொன்னார்:—

மைசூர் ஸமஸ்தானத்திலே பக்ஷி என்ற பட்டம் பெற்ற சங்கீத வித்துவானாகிய வீணை ஸாம்பையரென்பவர் ஒருமுறை அரியிலூருக்கு வந்தார். அவர் வீணையில் சிறந்த வித்துவான்.