பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

என் சரித்திரம்

என்னைத் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை. பிறகு வேறிடத்தில் தேடப் போனார்கள். அப்போது நான் வெளியில் வந்து நின்று அவர்களை அழைத்தேன். என்னை அவர்கள் கண்டு பிடிக்கவில்லை யென்பதில் எனக்கு ஒரு சிறிது பெருமை உண்டாயிற்று. “எங்கே ஒளிந்திருந்தாய்?” என்று அவர்கள் என்னைக் கேட்டபோது நான் இடத்தைக் கூறவில்லை. அந்த இடம் நான் ஒளிந்து கொள்வதற்காக அமைந்ததென்று தோற்றியது.

சில வருஷங்களுக்கு முன் நான் அரியிலூருக்கு ஒரு முறை போயிருந்தேன். அப்போது நான் இளமையிற் பழகிய இடங்களைப் பார்த்து மகிழ்ந்தேன். என்னுடன் சில கனவான்கள் வந்திருந்தார்கள். அவர்களையும் அழைத்துக்கொண்டு தசாவதார மண்டபத்திற்குப் போனேன். அங்கே வாமன மூர்த்திக்கு அருகில் நான் இளமையில் ஒளிந்திருக்கும் இடத்தை உற்றுக் கவனித்தேன். அப்போது, “இந்தக் குறுகிய இடத்தில் நாம் எப்படி இருந்தோமோ?” என்று எனக்கு வியப்பும் அச்சமும் உண்டாயின.

உடன் வந்த அன்பர்களில் ஒருவர், “அங்கே என்ன விசேஷம்? அவ்வளவு கவனமாகப் பார்க்கிறீர்களே” என்று கேட்டார்.

பார்த்த இடத்தில் சிற்பம் ஒன்றும் இல்லை; கட்டிட விசேஷமும் இல்லை. அங்கே அவர்கள் கண்ணுக்கு ஒரு புதுமையும் தோன்றவில்லை. எனக்கோ அப்படி அன்று. நான் அங்கே என்னையே கண்டேன்; என் இளமைப் பருவத்தின் விளையாட்டைக் கண்டேன். அவர்களுக்கு விஷயத்தை எடுத்துக் கூறிய பிறகு அவர்களும் அந்த இடத்தைப் பார்த்தார்கள்.

தந்தையார் கவலை

எனக்கு ஏழாம் பிராயம் நடந்தது. என் தந்தையார் மாதந்தோறும் என் பாட்டனாருக்குச் செய்யவேண்டிய கிரியைகளைச் செய்து வந்தார். வருஷ முடிவில் செய்யவேண்டிய ஆப்திக சிராத்தம் நெருங்கியது. அதற்கு வேண்டிய பொருளைச் சம்பாதிப்பதில் அவருக்கு நாட்டம் உண்டாயிற்று. அந்தக் கவலையோடு மற்றொரு செலவைப் பற்றிய கவலையும் சேர்ந்தது.

எனக்கு உபநயனம் செய்யவேண்டிய பிராயம் வந்துவிட்டமையால் அதற்குரிய முயற்சிகளும் செய்யவேண்டியிருந்தன. எல்லாம் பணத்தினால் நடைபெற வேண்டியவை. “எப்படியாவது ஆப்திக சிராத்தத்தை நடத்திவிடலாம்” என்ற தைரியம் என்