பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குன்னம் சிதம்பரம் பிள்ளை

81

தந்தையாருக்கு இருந்தது. “உபநயனம் செய்யவேண்டும்; அதற்கு என்ன செய்வது?” என்ற சிந்தனையில் அவர் ஆழ்ந்தார். சாணேற முழம் சறுக்கும் வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் மனம் தத்தளித்து நின்றது.

குமர பிள்ளை

அக்காலத்தில் என் தந்தையாரை ஆதரித்து வந்தவர்களுள் ஒருவராகிய கொத்தவாசற் குமரபிள்ளை என்பவர் ஒரு சமயம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்; அப்போது என் தந்தையாருடைய க்ஷேமலாபங்களை விசாரித்தார். பேசிவருகையில் என் உபநயனத்தைப்பற்றி அவர் கவலை யடைந்திருப்பதை யறிந்து, “அது விஷயமான கவலை தங்களுக்கு வேண்டாம். உபநயனத்துக்கு நான்கு நாட்களுக்கு முன் தங்களுக்குப் பணம் கிடைக்கும்” என்று வாக்களித்தார்.

துந்துபி வருஷம் வைகாசி மாதம் (1862, ஜூன்) என் பாட்டனாருக்கு ஆப்திக சிராத்தம் வந்தது. அதன் பொருட்டு உத்தமதானபுரம் செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. குமரபிள்ளை பொருளுதவி செய்வதாகச் சொல்லியிருப்பதை நம்பி ஆப்திகம் ஆன பிறகு ஆனி மாதமே என் உபநயனத்தை உத்தமதானபுரத்தில் நடத்தி விட எந்தையார் நிச்சயித்தார்.

உபநயனம்

நாங்கள் உத்தமாதானபுரத்திற்குச் சென்றோம். என் பாட்டனாரது சிராத்தம் நடைபெற்றது. அப்பால் எனக்கு உபநயனம் செய்வதற்குரிய முயற்சிகள் ஆரம்பமாயின. என் பிதா இன்ன தினத்தில் முகூர்த்தம் வைத்திருக்கிறதென்று குறிப்பிட்டுக் கொத்தவாசற் குமர பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். முகூர்த்தத்திற்கு நான்கு தினங்கள் முன்னதாக அந்த உபகாரி இரண்டு வேளாளப் பிள்ளைகளை வேண்டிய தொகையுடன் அனுப்பினார். அவர்கள் வந்து பணத்தை என் தந்தையார் கையிலே கொடுத்தார்கள். அதை வாங்கும்போது என் தந்தையாரும் அருகிலிருந்த சிறிய தந்தையாரும் கண்ணீர் விட்டு உருகினார்கள்.

குறிப்பிட்ட முகூர்த்தத்தில் எனக்கு உபநயனம் நடைபெற்றது. அதற்கு அரியிலூர், மாயூரம், கும்பகோணம், தியாக சமுத்திரம், சுவாமிமலை, கோட்டூர், சூரியமூலை, திருக்குன்றம், கணபதி அக்கிரகாரம். திருவையாற்றுக்குடி, திருவையாறு திருப்பழனம், பாபநாசம், சுரைக்காவூர், பொன்வேய்ந்தநல்லூர், தேவராயன் பேட்டை, அச்சுதேசுவரபுரம், உள்ளிக்கடை, ஊற்றுக்காடு,

என்—6