பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குன்னம் சிதம்பரம் பிள்ளை

83

புராணத்தில் அந்த வரலாறு உள்ள பாகத்திற்கு ‘விருத்த குமார பாலரான படலம்’ என்று பெயர். ஐயாக்குட்டி ஐயர் அந்தச் சரித்திரத்தைச் சொல்லும்போது, “கௌரிக்கு அவள் தகப்பனார் கௌரீ மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த மந்திரம் மிக்க நன்மையைத் தரவல்லது” என்று கூறி அந்த மந்திரத்தையும் எடுத்துரைத்தார். அவர் உரைத்த மந்திரத்தையும் அதை உச்சரிக்கும் முறையையும் அப்பொழுதே நான் மனத்திற் பதியச் செய்துகொண்டேன். அவர் அன்றிரவு மந்திரத்தைச் சொன்னதையே உபதேசமாகக் கருதி அது முதல் அதனை நானும் ஜபித்து வரலானேன்.

துன்பத்தின்மேல் துன்பம்

என் தந்தையார் அரியிலூரைச் சூழ்ந்துள்ள இடங்களுக்கு அழைப்பின் மேல் அடிக்கடி சென்று தம் சங்கீதத்தால் ஜனங்களை உவப்பித்து அங்கங்கே உள்ள அன்பர்களாற் பொருளுதவி பெற்று வருவார். சில கிராமங்களில் கிடைத்த பொருள் வருவாயிலிருந்து என் உபநயனத்திற்குக் குமரபிள்ளை உதவிய தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். ஸமஸ்தான வித்துவானென்ற பெயரே ஒழிய ஜமீன்தாரது ஆதரவு வர வரக் குறையலாயிற்று. ஜமீன்தாரே கடனில் மூழ்கியிருந்தார். கடன்தாரர்கள் கடனை வற்புறுத்திக் கேட்டபோது அவர் தம் கிராமங்களை விற்று அதனை அடைக்கத் தொடங்கினார். சுரோத்திரியமாகவிட்ட நிலங்களையும் விற்றார். எங்களுக்கு இலந்தங்குழி என்னுமிடத்தில் விட்டிருந்த சர்வமானியத்தையும் அவர் விற்றுவிட்டார். ஸமஸ்தானத்து உதவி இவ்வாறு அடியோடு நின்று போயிற்று.

இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் ஒரு துன்பம் போனால் மற்றொன்று வருவதற்குக் காத்து நிற்பதை என் தந்தையார் அநுபவத்தில் அறிந்தார். ஜமீனது சம்பந்தமும் ஆதரமும் அற்றுவிடவே, “இனி என்ன செய்வது?” என்ற யோசனை அவருக்கு உண்டாயிற்று. குடும்பம் நடத்தும் விஷயத்தில் ஏற்பட்ட கவலையை விட அதிகமான கவலை என் கல்வி விஷயத்தில் ஏற்பட்டது. அரியிலூரில் கல்விக்கு வேண்டிய உதவி இருந்தது; ஆனால் வருவாய் இல்லை. “இவ்வூரை விட்டால் வேறு எங்கே போவது?” என்னும் கவலை அவர் மனத்தை அலைக்கத் தொடங்கியது.

குன்னம் சிதம்பரம் பிள்ளை

இவ்வளவு சங்கடங்களில் அகப்பட்டுக் கலங்கும் எந்தையாரது உள்ளக் குறிப்பைச் சிதம்பரம் பிள்ளை என்னும் ஒருவர் ஒருவாறு