பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

என் சரித்திரம்

ஊகித்து அறிந்துகொண்டார். அரியிலூருக்கு வடக்கே உள்ள குன்னம் (குன்றம்) என்னும் கிராமத்துக் கணக்குப் பிள்ளை அவர்; கார்காத்த வேளாளர்; நல்ல செல்வாக்குள்ளவர்; என் தந்தையாருடைய பால்ய நண்பர். அவருடைய பந்துக்கள் அரியிலூரில் இருந்தனர். அவர்கள் வீட்டிற்கு அவர் அடிக்கடி வருவார். அப்படி வரும்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கும் வந்து என் தந்தையாரிடம் பேசி அளவளாவி விட்டுச் செல்வார் அவர் தமிழிலும் அறிவு வாய்ந்தவர். நான் தமிழ் படித்து வருவதை அறிந்து என்னிடம் பிரியமான வார்த்தைகளைப் பேசிப் பாராட்டி ஊக்கம் உண்டாக்குவார்.

என் தகப்பனார் ஒரு நாள் சிதம்பரம் பிள்ளையோடு பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச்சில் பழைய கம்பீரம் காணாமையால் சிதம்பரம் பிள்ளை அவர் உள்ளத்துள் இருக்கும் கவலையே அதற்குக் காரணமென்று ஊகித்து அறிந்தனர். பிறகு மெல்ல மெல்ல விசாரித்து ஜமீன் ஆதரவு இன்மையை உணர்ந்து வருந்தினார் குடும்பக் கடனைப் பற்றியும் அவர் அறிந்தார். உடனே, “நீங்கள் இனிமேல் இங்கே இருக்க வேண்டாம். குன்னத்திற்கு வந்துவிடுங்கள் அங்கே ஸ்திரமாக இருந்து வரலாம். உங்களுக்குக் குடும்பக் கவலை இல்லாதபடி நானும் என் அன்பர்களும் கவனித்துக் கொள்ளுகிறோம். உங்கள் குடும்பக் கடன் அடைவதற்கும் ஏதாவது வழி செய்கிறோம்” என்றார்.

என் தந்தையாருக்குப் புத்துயிர் உண்டாயிற்று. ஆண்டவன் கைவிடாமல் காப்பாற்றுவா னென்ற எண்ணம் உறுதி பெற்றது. குன்னம் வருவதாகச் சிதம்பரம் பிள்ளையிடம் கூறினார். அந்தச் செல்வர் ஊருக்குப் போனவுடனே நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீடு திட்டம் செய்து எங்கள் வரவை எதிர்பார்த்திருந்தார். அடிக்கடி மனிதர்களை அனுப்பி வரும்படி சொல்லி யனுப்பிக்கொண்டும் வந்தார்.

குன்னத்துக்குப் பிரயாணம்

என் தந்தையாருக்கு அரியிலூரைவிட்டுச் செல்ல மனம் துணியவில்லை. பழகிய மனிதர்களை விட்டுப் பிரிவது எளிதான காரியமா? என் படிப்பு விஷயத்திற் கருத்துடைய அவருக்குச் சடகோபையங்காரிடம் நான் கற்று வருவதில் திருப்தி இருந்தது. அரியிலூரைவிட்டுச் சென்றால் அதற்குத் தடை உண்டாகுமென்ற எண்ணமும் அவரைத் துன்புறுத்தியது. உணவுக்கு அடுத்தபடிதான் கல்வியாதலின் குன்னம் போவதே சரியென்று தீர்மானம் செய்து,