பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

என் சரித்திரம்

வருவார்கள். எல்லோரும் இலக்கண இலக்கியப் பயிற்சி நிரம்ப உடையவர்க ளென்று சொல்ல முடியாது. சிலருக்கு எளிய நடையில் விரைவாகச் செய்யுள் இயற்றும் பழக்கம் இருக்கும். சிலருக்குச் சில நூல்களில் மாத்திரம் பயிற்சி இருக்கும். ஆனால் எல்லோரும் தனிப் பாடல்கள் பலவற்றைப் பாடஞ்செய்து சமயத்துக் கேற்றபடி அவற்றைச் சொல்லிக் கேட்போரை மகிழ்விப்பார்கள். சிலர் மிக்க ஆடம்பரத்தோடு சில பேரைக் கூட்டிக்கொண்டு ஆரவாரம் செய்துகொண்டு வருவார்கள். வேறு சிலர் அடக்கமாக வருவார்கள். அவர்களுக்குக் கிராமத்தார் அளிக்கும் சம்மானம் ஒரு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரையில் இருக்கும்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றபடி புலவர்களின் நடையுடை பாவனைகளில் வேறுபாடு காணப்படும். புளியங்குடியிலிருந்து வரும் புலவர்கள் ஆடம்பரத்தோடு வருவார்கள். பூவந்திக் கொட்டைச் சாயம் ஏற்றிய தலைக்குட்டையும் துறட்டுக் கடுக்கனும் அணிந்து கொண்டிருப்பார் புலவர் தலைவர். அவர் தம் கையில் ஒரு தடி வைத்திருப்பார். அவரோடு சிலர் மாணக்கர்களென்று சொல்லிக்கொண்டு வருவார்கள். ஒருவிதமான இசையோடு புலவர் சடசடவென்று சலிப்பின்றித் தனிப்பாடல்களைச் சொல்லுவார். தென்பாண்டி நாட்டுக் கவிராயர்கள் பாடல் சொல்லும் இசை ஒருவிதம்; கொங்கு நாட்டுப் புலவர்கள் சொல்லும் இசை ஒருவிதம்; திருச்சிராப்பள்ளியைச் சார்ந்தவர்கள் சொல்லுவது ஒருவிதம்.

இத்தகைய புலவர்கள் குன்னத்திற்கு வந்தால் முதலில் சிதம்பரம் பிள்ளையைப் பார்ப்பார்கள். பிறகு பலருடைய முன்னிலையில் தங்கள் புலமையை வெளிப்படுத்தி நன்கொடை பெற்றுச் செல்வார்கள். புலவர்கள் வருஷந்தோறும் வந்து செல்வார்கள். இக்கிராமங்களை நம்பியே அவர்கள் புலவர்களாகவும் கவிராயர்களாகவும் வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறு புலவர்கள் வரும்போது அவர்கள் கூறும் செய்யுட்களைக்கேட்டு நான் பாடம் பண்ணிக் கொள்வேன். அவர்களுடைய பழக்கம் என் தமிழ்ப் பசியை அதிகமாக்கிற்று.

ஆடம்பரப் புலவர்

ஒரு நாள் ஒரு புலவரும் அவரைச் சேர்ந்த பரிவாரங்களும் பெரிய ஆரவாரத்துடன் குன்னத்திற்கு வந்தார்கள். புலவர் ஒரு சிவிகையில் ஏறிவந்தார். அவரைச் சேர்ந்த மாணக்கர்களும் ஏவலாளர்களுமாகப் பத்துப் பதினைந்து பேர் ஒரு கூட்டமாக