பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தருமவானும் லோபியும்

109



அவர் வெண்மணியில் கிராம மணியகாரர் வீட்டில் தங்கியிருந்தார். அங்கே சிலர் முன்னிலையில் அவர் சில பாடல்களைச் சொல்லி உபந்நியாசம் செய்தார். அப்போது இடையிலே உதாரணமாக, “அக்கரவம்புனை” என்ற பாடலைக்கூறி அதற்குப் பொருளும் சொன்னார். அது திருவரங்கத்தந்தாதியில் உள்ள 28-ஆம் செய்யுள். அதற்கு முந்தி 27 செய்யுட்களில் பொருளையும் நான் கார்குடி சாமி ஐயங்காரிடம் கேட்டிருந்தேனல்லவா? “மேற்கொண்ட செய்யுட்களின் பொருளை யாரிடம் கேட்டுத் தெளியலாம்?” என்ற கவலையுடன் இருந்த நான் அமிர்த கவிராயர் 28-ஆம் செய்யுளுக்குப் பொருள் கூறியபோது மிகவும் கவனமாகக் கேட்டேன். “இவர் இந்நூல் முழுவதையும் யாரிடமேனும் பாடம் கேட்டிருக்கக்கூடும். நம் குறையை இவரிடம் தீர்த்துக்கொள்ளலாம். ஏதேனும் பொருளுதவி செய்தாவது இவரிடம் பொருள் தெரிந்து கொள்ளலாம்” என்று எண்ணினேன். உடனே தலைதெறிக்க எங்கள் வீட்டுக்கு ஓடிச் சென்று திருவரங்கத் தந்தாதியை எடுத்து வந்தேன். இருபத்தொன்பதாம் செய்யுளாகிய “ஆக்குவித்தார் குழலால்” என்பதைப் படித்துப் பொருள் சொல்லும்படி அவரைக் கேட்டேன். அதற்கும் விரிவாக அவர் பொருள் உரைத்தார். மிக்க கவனத்தோடு கேட்டு என் மனத்திற் பதித்துக்கொண்டேன். பிறகு முப்பதாவது செய்யுளைப் படித்தேன். அவர் சொல்லுவதாக இருந்தால் அந்த நூல் முழுவதையுமே ஒரே மூச்சிற் படித்துக் கேட்கச் சித்தனாக இருந்தேன். ஆனால் என் விருப்பம் அவ்வளவு சுலபத்தில் நிறைவேறுவதாக இல்லை.

“பல பாடல்களுக்கு இன்று பொருள் தெரிந்து கொள்ளலாம்” என்ற ஆவலோடு முப்பதாவது பாடலைப் படித்த நிறுத்தி அவர் பொருள் சொல்லுவார் என்று எதிர்பார்த்து வாயையே நோக்கியிருந்தேன்.

“திருவரங்கத் தந்தாதி யமகம் அமைந்தது. எல்லோருக்கும் இது சுலபமாக விளங்காது. மிகவும் கஷ்டப்பட்டுப் பாடங் கேட்டால்தான் தெரியும். மற்ற நூல்களில் நூறு பாடல்கள் கேட்பதும் சரி; இதில் ஒரு பாடல் கேட்பதும் சரி” என்று அவர் எதற்கோ பீடிகை போட ஆரம்பித்தார்.

ஒரு நூலைப் பாடம் சொல்லும்போது அந்நூலின் அமைப்பைப் பற்றியும் அந்நூலாசிரியர் முதலியோரைப் பற்றியும் கூறுவது போதகாசிரியர்கள் வழக்கம். அம்முறையில் அவர் சொல்லுவதாக நான் எண்ணினேன். திருவரங்கத் தந்தாதியைச் சுலபமாகத் தெரிந்துகொள்ள இயலாதென்பதை அவர் சொன்னபோது அதனை