பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

என் சரித்திரம்

நான் அனுபவத்தில் அறிந்தவனாதலால், “உண்மைதான்; கார்குடி சாமி ஐயங்காரவர்களே இருபத்தேழு பாடல்களுக்கு மட்டுந்தான் பொருள் நன்றாகத் தெரியுமென்று சொன்னார்கள்” என்றேன்.

“பார்த்தீர்களா? அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். எவ்வளவோ தனிப்பாடல்களுக்கு அர்த்தம் சொல்லிவிடலாம். நைடதம் முழுவதையும் பிரசங்கம் செய்யலாம். இந்த அந்தாதி அப்படி ஊகித்து அர்த்தம் சொல்ல வராது. அழுத்தமாகப் பாடம் கேட்டிருக்க வேண்டும். நான் எவ்வளவோ சிரமப்பட்டுக் கேட்டேன். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு புதையலுக்குச் சமானம்”.

“புதையலென்பதில் சந்தேகமில்லை” என்று நான் என் மனத்துள் சொல்லிக்கொண்டேன்.

“இவ்வளவு பிரயாசைப்பட்டுக் கற்றுக்கொண்டதை இந்தத் தள்ளாத காலத்தில் சுலபமாக உமக்குச் சொல்லிவிடலாமா? கஷ்டப்பட்டுத் தேடிய புதையலை வாரி வீசுவதற்கு மனம் வருமா? மேலும், எனக்குத் தொண்டை வலி எடுக்கிறது. நான் போய் வருகிறேன்” என்று சொல்லி உடனே எழும்பிப் போய்விட்டார். நான் பெரிய ஏமாற்றத்தை அடைந்தேன். “கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே!” என்று வருத்தமுற்றேன்; “அக்கவிராயர் அவ்வளவு நேரம் பேசியதற்குப் பதிலாக இரண்டு செய்யுட்களுக்கேனும் பொருள் சொல்லியிருக்கலாமே!” என்று எண்ணினேன்.

உடனிருந்து எங்கள் சம்பாஷணையைக் கவனித்தவர்கள் என் முகவாட்டத்தைக் கண்டு, “பாவம்! இந்தப் பிள்ளை எவ்வளவு பணிவாகவும் ஆசையாகவும் கேட்டார்? அந்தக் கிழவர் சொல்ல முடியாதென்று சிறிதேனும் இரக்கமில்லாமற் போய்விட்டாரே! திருவரங்கத்தந்தாதி புதையலென்று அவர் கூறியது உண்மையே; அதைக் காக்கும் பூதமாக வல்லவோ இருக்கிறார் அவர்?” என்று கூறி இரங்கினார்கள்.

கவிராயர் ஒரு வேளை திரும்பி வருவாரோ என்ற சபலம் எனக்கு இருந்தது. அவர் போனவர் போனவரே. நாங்கள் அந்த ஊரில் இருந்த வரையில் அவர் வரவேயில்லை.

கரும்பு தின்னைக் கூலி கொடுப்பதுபோல எனக்குப் பாடமும் சொல்லி எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய உதவியும் செய்த கஸ்தூரி ஐயங்கார் முதலியோரின் இயல்புக்கும் அமிர்த கவிராயர் இயல்புக்கும் உள்ள வேறுபாட்டை எண்ணி எண்ணி வியந்தேன். பொருட்செல்வம் படைத்தவர்களிலேதான் தருமவானும் லோபியும்