பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xv

எழுத்தைப்‌ படித்து இன்புற்றார்கள்‌. பத்திரிகைகளில்‌ இவர்கள்‌ கட்டுறைகள்‌ வெளியாயின. மாதந்தோறும்‌ முதலில்‌ ஐயரவர்‌களின்‌ கட்டுரை ஒன்றைத்‌ தாங்கிச்‌ சிறப்படைந்தது கலைமகள்‌. தமிழ்‌ நாட்டுப்‌ பத்திரிகைகளின்‌ மலர்கள்‌ ஐயரவர்களின்‌ கட்டுரைகளோடு மலர்ந்தன.

தம்முடைய ஆசிரியராகிய மகாவித்துவான்‌ மீனாட்சிசுந்தரம்‌ பிள்ளையவர்களின்‌ வரலாற்றை வெளியிட வேண்டும்‌ என்னும்‌ நெடுநாள்‌ ஆர்வத்தால்‌ அவர்கள்‌ பல செய்திகளைக்‌ தொகுத்து வைத்திருந்தார்கள்‌. அவற்றைக்‌ கொண்டு மிக விரிவாக அச்‌சரித்திரத்தை இரண்டு பாகங்களாக எழுதி முடித்தார்கள்‌. தம்முடைய வாழ்க்கையில்‌ எந்தப்‌ பெரியார்களேடு பழக நேர்ந்ததோ அவர்களைப்‌ பற்றிய வரலாறுகளையும்‌ நிகழ்ச்சிகளையும்‌ சுவை ததும்ப எழுதினார்கள்‌. தியாகராச செட்டியார்‌ சரித்திரம்‌, கோபாலகிருஷ்ண பாரதியார்‌ சரித்திரம்‌, மகாவைத்தியநாதையர்‌ சரித்திரம்‌, கனம்‌ கிருஷ்ணையர்‌ வரலாறு என்பன இவர்களுடைய அன்பையும்‌ எழுதும்‌ ஆற்றலையும்‌ நன்றியறிவையும்‌ விளக்குகின்றன. சிலருடைய வரலாற்றைச்‌ சுருக்கமாக எழுதினார்கள்‌; இந்த வகையில்‌ பூண்டி அரங்கநாத முதலியார்‌, மணி ஐயர்‌, வி. கிருஷ்ணசாமி ஐயர்‌, திவான்‌ சேஷையா சாஸ்திரிகள்‌ முதலியவர்களைப்‌ பற்றிய கட்டுரைகள்‌ வெளியாயின.

இவர்களுடைய பெருமையைக்‌ தமிழுலகம்‌, மெல்ல மெல்ல உணரலாயிற்று. அரசாங்கத்தார்‌, 1906 ஆம்‌ ஆண்டு 'மகாமகோபாத்தியாயர்‌' என்ற பட்டத்தை அளித்தார்கள்‌. 1977ஆம்‌ ஆண்டு பாரத தர்ம மண்டலத்தார்‌, 'திராவிட வித்தியா பூஷணம்‌' என்ற பட்டத்தை வழங்கிச்‌ சிறப்பித்தார்கள்‌. 1925_ ஆம்‌ ஆண்டு காமகோடி பீடாதிபதிகளாகிய ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகளவர்கள்‌, 'தாக்ஷிணாத்திய கலாநிதி' என்ற பட்டத்தை அருளினார்கள்‌. இவர்கள்‌, சென்னை, மைசூர்‌, ஆந்திரா, காசி முதலிய இடங்களில்‌ உள்ள பல்கலைக்‌ கழகங்களில்‌ பல வகையில்‌ கலந்து தொண்டாற்றினார்கள்‌. 1992 இல்‌ சென்னைப்‌ பல்கலைக்‌ கழகத்தார்‌ 'டாக்டர்‌' பட்டம்‌ அளித்தார்கள்‌.

1935ஆம்‌ ஆண்டு மார்ச்சு மாதம்‌ 6ஆம்‌ தேதி ஐயரவர்கள்‌ 80 ஆண்டுகள்‌ நிறைந்து விளங்கினார்கள்‌. அவர்களுடைய

சதாபிஷேக விழாவைத்‌ தமிழுலகம்‌ முழுவதும்‌ கொண்டாடியது. சென்னையில்‌ பல்கலைக்‌ கழக மண்டபத்தில்‌ இவ்விழா மிகமிகச்‌ சிறப்பாக நடைபெற்றது.