பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

என் சரித்திரம்

அபிவிருத்தியிலும் கருத்துடைய பலர் பல ஊர்களில் இருந்தனர். அவர்கள் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற எண்ணினோம். ஆனால் அது சாத்தியமன்று என்று கருதிக் குன்னத்திற்குச் சென்று அங்குள்ள நண்பர்களிடம் மாத்திரம் சொல்லிக்கொண்டோம். பார்த்த நண்பர்களிடம் மற்றவர்களுக்கும் சொல்லும்படி கேட்டுக்கொண்டோம். அங்கிருந்து அரியிலூர் வந்து சேர்ந்தோம்.

அரியிலூரில்

என் முதல் தமிழாசிரியராகிய சடகோபையங்காரிடம் எனக்குக் கிடைக்கப் போகும் பாக்கியத்தைப் பற்றிச் சொல்லி அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற எண்ணி அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது அவர் வெளியே சென்றிருந்தார். ஓரிடத்தில் ஒரு புதிய புஸ்தகம் இருந்தது. அந்த வீட்டை என் சொந்த வீட்டைப்போலவே எண்ணிப் பழகியவனாதலால் அப்புஸ்தகத்தை எடுத்துப் பார்த்தேன். அது பிள்ளையவர்கள் இயற்றிய திருநாகைக்காரோணப் புராணமாக இருந்தது. நான் பிள்ளையவர்களுடைய புலமையைப் பற்றிக் கேட்டிருப்பினும் அவர் இயற்றிய நூல் எதனையும் பார்த்ததில்லை. அப்புராணம் அச்சந்தர்ப்பத்தில் கிடைத்ததை ஒரு பெரிய நன்னிமித்தமாக எண்ணினேன். அதில் ஒவ்வோர் ஏடாகத் தள்ளிப் பார்த்தேன்; சில பாடல்களையும் படித்தேன். யாப்பிலக்கணத்தை நன்றாகப் படித்து முடித்த சமயமாதலால் அச்செய்யுட்களின் அமைப்பையும் எதுகை, மோனை நயங்களையும் ஓசை இன்பத்தையும் தெரிந்து அனுபவித்து மகிழ்ந்தேன். பலவிடங்களில் திரிபுயமகங்களும் சித்திரகவிகளும் அதில் அமைந்திருந்தன. “இந்த நூலையும் இது போன்ற பல நூல்களையும் இயற்றிய மகா புருஷரிடம் படிக்கப் போகிறோம்” என்று எண்ணி எண்ணி நான் பெருமிதம் அடைந்தேன்.

அப்புஸ்தகத்தை ஆவலோடு புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டே இருக்கையில், “வேங்கடராமா, எப்பொழுது வந்தாய்?” என்று சொல்லியவண்ணம் சடகோபையங்கார் உள்ளே வந்தார். அவரை நான் கண்டவுடன் நமஸ்காரம் செய்தேன். பின்பு, நான் பிள்ளையவர்களிடம் படிக்கப் போவதாக அவரிடம் சொன்னேன்.

“நல்ல காரியம். அவர் ஒரு மகா கவி; சிறந்த புலவர்; மிகவும் பெரியவர்; இந்தப் புராணம் அவர் இயற்றியதுதான். இங்குள்ள வக்கீல் பாலகிருஷ்ணபிள்ளை என்பவர் சில காலமாக இதனைப் பாடங் கேட்டு வருகிறார். அதனால் இதை நான் படிக்க நேர்ந்தது.