பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாயூரப் பிரயாணம்

155

கனம் கிருஷ்ணையருடைய கீர்த்தனங்கள் பல அவருக்குத் தெரியும். மந்திர சாஸ்திரத்திலும் அவர் வல்லவர். பல தெய்வங்களை உபாசித்து வந்தார். பலவகையான மந்திர ஜபங்களையும் யந்திர பூஜையையும் அவர் செய்து வந்தார். சர்ப்ப விஷத்தைப் போக்குவதில் நிபுணர். நல்லபாம்பு கடித்து மயக்கமுற்ற ஒருவனை ஞாபகமே இல்லாத நிலையில் அவரிடம் எடுத்து வந்தால் பத்து நிமிஷத்தில் மந்திரித்து அவன் தானே எழுந்து நடந்து செல்லும்படி செய்வார்.

என் தந்தையார் அவரிடத்தில் என்னை அழைத்துச் சென்று ஸ்ரீ வல்லபகணபதி மந்திரம், ஸ்ரீ நீலகண்ட மந்திரம், ஸ்ரீ சுப்பிரமணிய ஷடாக்ஷரம் என்பவற்றை உபதேசம் செய்யச் சொன்னார். அவர் அவற்றை உபதேசித்து, “உனக்கு மேலும் மேலும் சௌக்கியம் உண்டாகும்” என்று ஆசீர்வாதம் செய்தார். சில தினம் அவரோடு இருந்து பழகிய பின் அவரிடம் விடைபெற்று உத்தமதானபுரம் வந்து சேர்ந்தோம்.

பிரயாண ஏற்பாடு

மாயூரப் பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினோம். என் தந்தையார் கையிலோ பணம் இல்லை. அதனை அறிந்து அவர் நண்பரும் உத்தமதானபுரத்துக்கு மிகவும் சமீபமான உத்தமதானி என்னும் ஊரில் இருந்தவருமான சாமு மூப்பனர் என்பவர் செலவுக்காக ரூபாய் இருபத்தைந்து கடனாகக் கொடுத்தார். அந்தத்தொகை அப்பொழுது மிகப்பெரிய சம்பத்தைப்போல உதவியது; என் படிப்புக்கு மூலாதாரமாக இருந்தது. உத்தமதானபுரத்திலும் பக்கத்திலுமுள்ள பந்துக்களிடம் நான் மாயூரம் போவதாக விடைபெற்றுக்கொண்டேன்.

என் தாயார் அப்போது கருவுற்றிருந்தமையால் என் தந்தையார் அவரையும் என்னையும் அழைத்துக்கொண்டு சூரியமூலைக்குச் சென்றார். அங்கே நாங்கள் சில தினம் இருந்தோம். என் மாதாமகர் நான் பிள்ளையவர்களிடம் படிக்கச் செல்வதை அறிந்து மகிழ்ந்து என்னை ஆசீர்வதித்தார்.

மாயூரம் சென்றது

அப்பால் என் தாயாரை அங்கே விட்டுவிட்டு நானும் என் தந்தையாரும் மாயூரம் வந்து சேர்ந்தோம். அவ்வூரில் மகாதானபுரத் தெருவில் என் சிறிய தந்தையார் வேட்டகத்தில் தங்கினோம். அப்பொழுது அங்கே என் சிறிய தாயாரும் வந்திருந்தார்.