பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

என் சரித்திரம்


“சரி, நாளைக்கு ஏதாவது பிரபந்தம் பாடம் சொல்லுகிறேன்” என்று அவர் கூறினார்.

முதற் பாடம்

மறுநாட் காலையில் என் ஆசிரியர் தாமே என்னை அழைத்து, “உமக்குத் திருக்குடந்தைத் திரிபந்தாதியைப் பாடம் சொல்லலாமென்று நினைக்கிறேன்” என்று சொல்லி அந்நூல் எழுதியிருந்த ஏட்டுச் சுவடியை வருவித்துக் கொடுத்தார். நான் பாடம் கேட்கத் தொடங்கினேன்.

திருக்குடந்தைத் திரிபந்தாதி என்பது பிள்ளையவர்கள் இயற்றியது. கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகும்பேசுவரர் விஷயமானது. திரிபந்தாதியாதலால் சற்றுக் கடினமாகவே இருக்கும்.

அந்நூலில் நாற்பது பாடல்களுக்கு மேல் அன்று பாடம் கேட்டேன். திரிபு யமக அந்தாதிகளில் ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு பாடல்களுக்கு மேல் பாடம் சொல்பவரை அதுவரையில் நான் பார்த்ததில்லை. பிள்ளையவர்கள் பாடம் சொல்லுகையில் விஷயங்களை விரிவாக உபமான உபமேயங்களோடு சொல்லுவதில்லை. எந்த இடத்தில் விளக்க வேண்டியது அவசியமோ அதை மாத்திரம் விளக்குவார். அவசியமான விசேஷச் செய்திகளையும் இலக்கண விஷயங்களையும் சொல்லுவார். மாணாக்கர்களுக்கு இன்ன விஷயம் தெரியாதென்பதை அவர் எவ்வாறோ தெரிந்துகொள்வார். நான் படித்து வரும்போது எனக்கு விளங்காத இடத்தை நான் கேட்பதற்கு முன்னரே அவர் விளக்குவார்; எனக்குத் தெரிந்ததை அவர் விளக்க மாட்டார். “நமக்கு இது தெரியாதென்பதை இவர் எப்படி இவ்வளவு கணக்காகத் தெரிந்து கொண்டார்” என்ற ஆச்சரியம் எனக்கு உண்டாகும். தம் வாழ்வு முழுவதும் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லிச் சொல்லிப் பழகியிருந்த அவர் ஒவ்வொருவருடைய அறிவையும் விரைவில் அளந்தறிந்து அவர்களுக்கு ஏற்ப பாடம் சொல்வதில் இணையற்றவராக விளங்கினார்.

நிதிக்குவியல்

அவர் பாடம் சொல்வது பிரசங்கம் செய்வதுபோல இராது. அரியிலூர்ச் சடகோபையங்கார் முதலிய சிலர் ஒரு செய்யுளுக்கு மிகவும் விரிவாகப் பொருள் சொல்லிக் கேட்போர் உள்ளத்தைக் குளிர்விப்பார்கள். பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறையே வேறு. அவர்களெல்லாம் தம்மிடம் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தைப் பாதுகாத்து வைத்திருப்பவர்களைப்போல் இருந்-