பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு மயம்

199

பதற்குப் பதிலாக அவரே பிரார்த்தித்தார். எனக்காகவே அப்பாடல் இயற்றப் பெற்றது.

இத்தகைய எண்ணங்கள் என் உள்ளத்தில் தோன்றின. நான் மகிழ்ந்தேன்; பெருமிதமடைந்தேன்; உருகினேன். அதுமுதல் அச்செய்யுளை நாள்தோறும் சொல்லி வரலானேன். நான் சொந்தமாக இயற்றிய செய்யுள் என் நினைவில் இல்லை. எனக்காக என் ஆசிரியர் பாடித் தந்த செய்யுளே என் உள்ளத்தில் இடங்கொண்டது.

முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்

முருகக் கடவுள் தமிழுக்குத் தெய்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். தமிழ்க் கல்வியையே விரும்பி வாழ்ந்த எனக்கு அப்பெருமானிடத்தே பிரார்த்தனை செய்ய வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. மந்திர ஜபத்தால் அவரது உபாஸனையை ஒருவாறு செய்து வந்தாலும் தமிழ்க் கடவுளைத் தமிழ்ச் செய்யுளாலே உபாஸித்துவர வேண்டு மென்ற அவா உண்டானமையால் எந்தத் தமிழ் நூலையாவது தினந்தோறும் பாராயணம் செய்து வர வேண்டுமென்று உறுதி செய்துகொண்டேன். குமரகுருபர சுவாமிகள் முருகக் கடவுள் திருவருள் பெற்றவரென்று அறிந்து அவர் இயற்றிய நூல்களில் ஒன்றாகிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழைத் தினந்தோறும் காலையில் பாராயணம் செய்து வரலானேன். இப்பழக்கம் உத்தமதானபுரத்திலேயே ஆரம்பமாயிற்று. பிள்ளையவர்களிடத்தில் வந்த பிறகும் இப்பாராயணம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்நிலையில் என் ஆசிரியர் எனக்காகப் பாடிக்கொடுத்த வெண்பாவும் கிடைத்ததென்றால் எனக்குண்டான திருப்தியைச் சொல்லவா வேண்டும்? அதனையும் ஒரு மந்திரமாகவே எண்ணிச் சொல்லி வந்தேன்.

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் முழுவதையும் பாராயணம் செய்து வருவதால் காலையில் சில நாழிகை பாடங் கேட்க இயலாது. நான் பாராயணம் செய்து வருவது பிள்ளையவர்களுக்குத் தெரியும். மற்றவர்களுக்குப் பாடஞ் சொல்ல ஆரம்பிக்கும்போது நான் இல்லாவிடின் எனக்காகக் காத்திருப்பது அவரது வழக்கமாயிற்று. இத்தகைய தாமதம் ஏற்படுவதை மாற்றும் பொருட்டு அவர் ஒரு நாள் என்னிடம், “முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழை முற்றும் இவ்வாறு பாராயணம் செய்வது நன்மையே; ஆனாலும் தினந்தோறும் செய்து வரும்போது சில