பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலமையும் வறுமையும்

207

பவன் போல எழுந்து வேகமாகக் காவிரிக் கரையிலுள்ள கடைக்கு ஓடிப்போய் என்னிடமிருந்த ரூபாயிலிருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டு வந்து சமையற்காரனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் பாடஞ் கேட்பதற்கு வந்து அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்துக் காய்ச்சின எண்ணெய் வந்தது. அவர் தேய்த்துக்கொண்டார்.

இப்படி இடையிடையே நிகழும் சில நிகழ்ச்சிகளால் அவருடைய நிலையை அறிந்தபோது என் மனம் புண்ணாகிவிடும். “புலமையும் வறுமையும் சேர்ந்து இருப்பது இந்நாட்டிற்கு வாய்ந்த சாபம் போலும்!” என்று எண்ணினேன்.

அவர் வாழ்க்கை

பிள்ளையவர்கள் பெரும்பாலும் சஞ்சாரத்திலேயே இருந்தமையால் குடும்பத்தோடு ஒரே இடத்தில் நிலையாக இருக்க முடியவில்லை. அவர் தம் மனைவியையும் குமாரராகிய சிதம்பரம் பிள்ளையையும் திரிசிரபுரத்தில் தம் சொந்த வீட்டிலேயே இருக்கச் செய்திருந்தார். அவ்வப்போது வேண்டிய செலவுக்குப் பணம் அனுப்பி வருவார். மாயூரத்தில் இருந்தபோது அவருடன் இரண்டு தவசிப் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு மாதம் இரண்டு கலம் சம்பளம் திருவாவடுதுறை மடத்திலிருந்து அளிக்கப்பெற்று வந்தது. அவர்களது ஆகாரம் முதலிய மற்றச் செலவுகள் பிள்ளையவர்களைச் சார்ந்தன.

தவசிப் பிள்ளை

அந்த இருவர்களுள் பஞ்சநதம் பிள்ளை என்பவன் ஒருவன். தான் மடத்தினால் நியமிக்கப்பட்டவனென்ற எண்ணத்தினால் அவன் முடுக்காக இருப்பான். “இந்தப் பெரியாருக்குப் பணிவிடை செய்ய வாய்த்தது நம் பாக்கியம்” என்ற எண்ணம் அவனிடம் கடுகளவும் இல்லை. தமிழ் வாசனையை அவன் சிறிதும் அறியாதவன். “ஊரில் இருப்பவர்களையெல்லாம் சேர்த்துக் கூட்டம் போட்டுப் பயனில்லாமல் உழைத்துச் செலவு செய்து வாழ்கிறார்” என்பதுதான் பிள்ளையவர்களைப் பற்றி அவனது எண்ணம். பிள்ளையவர்கள்பால் பாடம் கேட்கும் மாணாக்கர்களிடம் அவனுக்கு வெறுப்பு அதிகம். பிள்ளையவர்கள் தம்மிடம் யாரேனும் மரியாதையாக நடந்து கொள்ளாவிட்டால் அதை அவர் பொருட்படுத்த மாட்டார்; அவனோ மாணாக்கர்களெல்லாம் தன்னிடம் மரியாதை காட்டவேண்டுமென்று விரும்புவான். அவனுக்குக் கோபம் உண்டாக்கிவிட்டால் அதிலிருந்து தப்புவது மிகவும் கஷ்டமாக இருக்கும். அவனுடைய குணங்களை முன்பு நான் அறிந்திலேன்.