பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

என் சரித்திரம்

ஏதேனும் பிரசாதம் கொடுக்கும்படி சாமியிடம் சொல்ல வேண்டுமென்று என்னை அனுப்பினார்கள்” என்று விடை அளித்தார்.

தம்பிரான் எங்களை நிமிர்ந்து பார்த்தார். “பிள்ளையவர்களா வந்திருக்கிறார்கள்? அவர்கள் கட்டளை மடத்துக்கு வரக் கூடாதா?” என்று கேட்டார்.

“அவர்கள் தளர்ச்சியாக இருக்கிறார்கள். என் ஜாகையில் இருந்தால் படுத்துக்கொண்டே இருக்கலாம். யாரேனும் கால் பிடிப்பார்கள். மடத்துக்கு வந்தால் சாமிக்கு முன் படுத்துக்கொள்வதும் கால், கை பிடிக்கச் சொல்வதும் உசிதமாக இருக்குமா? அதனால்தான் என் வீட்டில் தங்கியிருக்கிறார்கள்” என்று சுப்பையா பண்டாரம் விடையளித்தார்.

“சரிதான். மடத்திலே பழகினவர்களுக்குந்தான் மரியாதை தெரியும். அவர்கள் நம்மிடம் எவ்வளவு விசுவாசம் வைத்திருக்கிறார்களென்பது நமக்குத் தெரியாதா?” என்று தம்பிரான் சொன்னார்.

பிறகு அங்கே நின்ற மடைப்பள்ளிக் காரியஸ்தரைப் பார்த்தார்; ‘சாமி” என்று வாயைப் பொத்திக்கொண்டே அந்தப் பிராமணர் முன்னே வந்தார். “என்ன?” என்று தம்பிரான் கேட்டார். “இவர் வந்திருக்கிறார்; இவருக்கு உபசாரத்துடன் பிரசாதம் கொடுக்க வேண்டும்” என்ற அர்த்தம் அந்தக் கேள்வியின் தொனியிலேயே அடங்கியிருந்தது. “சாமி” என்று காரியஸ்தர் மறுபடியும் சொன்னார். “சரியாகக் கவனித்துக் கொள்ளுகிறேன்” என்ற அர்த்தத்தை அவர் குரல் உள்ளடக்கியிருந்தது. “ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள்ள வேண்டும்; தெரியுமா?” என்று தம்பிரான் விளக்கமாக உத்தரவிட்டார். காரியஸ்தர் அதனை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக மீட்டும், “சாமி” என்று சொல்லிவிட்டு என்னை அழைத்துச் சென்றார்.

அர்த்தஜாம பூஜை நடப்பதற்குச் சிறிது முன்பு நான் போனேன். ஆதலால், ஆலயத்தினுள்ளே சென்று சுவாமிக்கு முன் நமஸ்காரம் செய்தேன். காரியஸ்தர் அவசரப்படுத்தினார். தரிசனத்தை நான் சுருக்கமாகச் செய்துகொண்டு மடைப்பள்ளிக்குள் அவருடன் புகுந்தேன்.

பசியும் ஆவலும்

இரவு பத்துமணி ஆகிவிட்டமையாலும் திருவாவடுதுறையிலிருந்து வந்த சிரமத்தாலும் எனக்குப் பசி அதிகமாகத்தான் இருந்-