பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாவடுதுறைக் காட்சிகள்

267

அங்கே ஸ்வாமி சந்நிதியிலுள்ள ரிஷபம் மிகப் பெரியது. “படர்ந்த அரசு வளர்ந்த ரிஷபம்” என்று ஒரு பழமொழி அப்பக்கங்களில் வழங்குகிறது.

அவ்வாலயம் திருவாவடுதுறை மடத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இயல்பாகவே சிறப்புள்ள அவ்வாலயம் ஆதீன சம்பந்தத்தால் பின்னும் சிறப்புடையதாக விளங்குகிறது.

உத்ஸவச் சிறப்பு

குருபூஜை நடைபெறும் காலத்தில் இவ்வாலயத்திலும் ரதோத்ஸவம் நடைபெறும். உத்ஸவம் பத்துநாள் மிகவும் விமரிசையாக நிகழும். ரத சப்தமியன்று தீர்த்தம். பெரும்பாலும் ரத சப்தமியும் குருபூஜையும் ஒன்றையொன்று அடுத்தே வரும்; சில வருஷங்களில் இரண்டும் ஒரே நாளில் வருவதும் உண்டு. ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் ஸ்ரீ கோமுத்தீசர் வீதியில் திருவுலா வருவார். அப்பொழுது ஆதீனகர்த்தர் பரிவாரங்களுடன் வந்து உத்ஸவம் ஒழுங்காக நடைபெறும்படி செய்விப்பார். தியாகராஜ மூர்த்தியின் நடனமும் உண்டு. அதற்குப் பந்தர்க் காட்சியென்று பெயர். ஆலயத்தில் உத்ஸவமும் மடத்தில் குருபூஜையும் ஒருங்கே நடைபெறுவது ஒரு சிறப்பாகவே இருக்கும். அயலூரிலிருந்து வருபவர்களுடைய கண்களையும் உள்ளத்தையும் கவர்வதற்கு உரிய பல விசேஷங்களுக்கும் அவ்விரண்டு நிகழ்ச்சிகளே காரணமாக அமைந்தன. சிவபக்தியுள்ளவர்கள் ஆலய உத்ஸவத்திலே ஈடுபட்டனர். ஞானாசிரிய பக்தி உடையவர்கள், குருபூஜா விசேஷங்களில் ஈடுபட்டனர். இரண்டும் உடையவர்கள் “எல்லாவற்றையும் ஒருங்கே தரிசித்து இன்புறுவதற்குப் பல தேகங்களும் பல கண்களும் இல்லையே!” என்று வருந்தினார்கள்.

சாப்பாடு

நான் திருவாவடுதுறை வீதியில் நுழைந்தது முதல் அங்குள்ள ஆரவாரமும் நான் கண்டகாட்சிகளும் என்னைப் பிரமிக்கச் செய்தன. ஒவ்வோரிடத்திலும் உள்ளவற்றை நின்று நின்று பார்த்தேன். அக்கூட்டத்தில் பிள்ளையவர்கள் இருக்குமிடத்தை நான் எங்கே கண்டுபிடிப்பது? என்னுடன் வந்தவரையும் அழைத்துக்கொண்டு தெருத்தெருவாக அலைந்தேன். எங்கள் கண்களும் அலைந்தன. பன்னிரண்டு மணி வரையில் சுற்றிச்சுற்றிக் கால்வலி கண்டது; வயிற்றிலும் பசி கிண்டியது. சாப்பிட்ட பிறகு பார்க்கலாமென்று எண்ணிப் போஜனசாலைக்குப் போனோம்.