பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

என் சரித்திரம்

காசிக் கலம்பகத்தை நானே படித்தேன். அந்தப் பெரிய குருபூஜை விழாவில் வெளியில் அங்கங்கே வாத்திய கோஷங்களும் கொண்டாட்டங்களும் ஸந்தோஷ ஆரவாரங்களும் நிரம்பியிருக்க, நாங்கள் ஒரு குளத்தங்கரையில் சிறிய சவுகண்டியில் காசி மாநகர்ச் சிறப்பையும் கங்கையின் பெருமையையும் ஸ்ரீ விசுவநாதரது கருணா விசேஷத்தையும் காசிக்கலம்பகத்தின் மூலம் அனுபவித்து வந்தோம். ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் வாக்காகிய அக்கலம்பகம் சொற்சுவை, பொருட்சுவை நிரம்பியது. சில காலமாகப் பிள்ளையவர்களையும் தமிழ்ப்பாடத்தையும் விட்டுப்பிரிந்திருந்த எனக்கு அன்று பிள்ளையவர்களைக் கண்ட லாபத்தோடு பாடங் கேட்கும் லாபமும் சேர்ந்து கிடைத்தது.

இரவு எட்டுமணி வரையில் அப்பிரபந்தத்தைக் கேட்டோம். ஐம்பது பாடல்கள் நடைபெற்றன. பிறகு அவரவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள். பிள்ளையவர்கள் தெற்கு வீதியில் தாம் தங்கியிருந்த விடுதியாகிய சின்னோதுவார் வீட்டுக்குச் சென்றார்.

அத்தியாயம்—45

புலமையும் அன்பும்

குருபூஜைத் தினத்தன்று இரவு ஆகாரமான பிறகு அங்கே நடைபெறும் விசேஷங்களைப் பார்க்கச் சென்றேன். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஓர் அழகிய சிவிகையில் அமர்ந்து பட்டணப் பிரவேசம் வந்தார். உடன் வந்த அடியார்களின் கூட்டமும் வாண வேடிக்கைகளும் வாத்திய முழக்கமும் அந்த ஊர்வலத்தைச் சிறப்பித்தன. பல சிறந்த நாதஸ்வரகாரர்கள் தங்கள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தினர். சிவிகையின் அலங்காரம் கண்ணைப் பறித்தது. பட்டணப் பிரவேச காலத்தில் சிஷ்யர்கள் வீடுகளில் தீபாராதனை நடந்தது.

கொலுக் காட்சி

பட்டணப் பிரவேசம் ஆன பிறகு கொலு நடைபெற்றது. அப்போது கொலுமண்டபத்தில் ஆதீனத் தலைவர் வீற்றிருக்க அவருக்குப் பூஜை முதலியன நடைபெறும். புஷ்பங்களால் அலங்கரிக்கப் பெற்ற மண்டபத்தின் இடையே சுப்பிரமணிய தேசிகர் அசையாமல் அமர்ந்திருந்தார். அவருடைய மேனியின் அமைப்பும் ஒளியும் ஏதோ ஓர் அழகிய விக்கிரகத்தை அங்கே