பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலமையும் அன்பும்

271

அங்கே வைத்துத் தூப தீபங்களுடன் பூஜை செய்வதாகவே தோற்றச் செய்தன. கொலு நடைபெறும் இடத்தில் பெருங்கூட்டமாக இருந்தது. தேவாரப் பண்ணிசையும் வாத்திய கோஷமும் இடைவிடாமல் ஒலித்தன.

எல்லாவற்றையும் கண்டுகளித்துப் பின்பு பிள்ளையவர்கள் தங்கியிருக்கும் ஜாகைக்கு வந்தேன். ஆசிரியர் உறங்காமல் தம் நண்பராகிய மகாலிங்கம் பிள்ளையென்பவருடன் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்கள் பேச்சினால் அந்த மடத்துச் சம்பிரதாயங்களும் சுப்பிரமணிய தேசிகரது சிறப்பும் எனக்குத் தெரியவந்தன.

கொலு நடந்த பிறகு தேசிகர் சிரமபரிகாரம் செய்துகொள்ளாமல் வந்தவர்களுக்கு விடைகொடுத்து அனுப்புவது வழக்கம். மறுநாள் காலையிலே புறப்பட்டுப்போக வேண்டியவர்கள் குருபூஜையன்று இரவே தேசிகரைத் தரிசித்து உத்தரவுபெற்றுச் செல்வார்கள், குருபூஜையன்று காலையில் வேளாளப் பிரபுக்களும் பிறரும் தங்கள் தங்களால் இயன்ற பொருளைப் பாதகாணிக்கையாக வைத்துத் தேசிகரை வணங்குவார்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவரவர்கள் தகுதிக்கு ஏற்றபடி சம்மானம் செய்து அனுப்பும் காரியத்தை ஆதீனகர்த்தர் குருபூஜையன்று இரவு கவனிப்பார். சுப்பிரமணிய தேசிகர் இவ்விஷயத்தில் சிறிதேனும் தாமதம் செய்யாமல் வந்தவர்களுடைய சௌகரியத்தை அனுசரித்து உடனுக்குடன் அனுப்பிவிடுவார். பிரபுக்களை அனுப்புவதோடு வித்துவான்களையும் தக்க சம்மானம் செய்து அனுப்புவார். பலர் மறுநாளும் இருந்து சல்லாபம் செய்து விடைபெற்றுச் செல்வதுண்டு.

செய்யுள் தானம்

இச்செய்திகளெல்லாம் பிள்ளையவர்களும் மகாலிங்கம் பிள்ளையும் பேசிக்கொண்டிருந்த சம்பாஷணையால் தெரியவந்தன. கொடையாளிகள் கொடைபெறுவாருடைய சௌகரியத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்வதை நான் அதற்கு முன் எங்கும் கேட்டதில்லை; கண்டதுமில்லை. சுப்பிரமணிய தேசிகர் அத்தகையவரென்பதை அறிந்தபோது அவருக்கு ஏற்பட்டிருக்கும் புகழ் முற்றும் தகுதியானதே என்று நினைத்தேன். நான் அக்காட்சியை நேரே சிறிதுநேரம் பார்த்துவிட்டும் வந்தேன்.

மகாலிங்கம் பிள்ளை பேசி விடைபெற்றுச் சென்ற பிறகு ஆசிரியர் அவ்வீட்டின் இடைகழித் திண்ணையில் சயனித்துக்கொண்டார். ஒரு நிமிஷங்கூட இராது; அதற்குள் யாரோ ஒரு