பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலமையும் அ்ன்பும்

275

சோழ மண்டல சதக ஏட்டுப் பிரதியைப் பிள்ளையவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கிய ஆசிரியர் என்னிடம் அளித்துப் பிரித்துப் படிக்கும்படி சொன்னார். புதிய நூல்களைப் படிப்பதில் எனக்கு அளவில்லாத சந்தோஷம் உண்டு. ஆதலால் அதை ஊக்கத்தோடு படிக்க ஆரம்பித்தேன். அங்கங்கே அவர் விஷயங்களை விளக்கிக்கொண்டே சென்றார்.

சோழ மண்டல சதகமென்ற பெயரைக் கேட்டவுடனே எனக்கு நான் படித்த சதகங்களின் ஞாபகந்தான் வந்தது. நீதிகளை நூறு நூறு பாடல்களால் எடுத்துக்கூறும் அந்தச் சதகங்களில் உள்ள செய்யுட்களைப் போன்ற பாடல்களை இச்சதகத்திற் காணவில்லை. “சதகமென்றால் பெரிய பாட்டுக்களாக இருக்குமே” என்று ஐயுற்று நான் வினாவியபோது, நீதி சதகங்களுக்கும் மண்டல சதகங்களுக்குமுள்ள வேற்றுமையை ஆசிரியர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

ஒவ்வொரு நாட்டின் பெருமையையும் அந்நாட்டில் வாழ்ந்திருந்த அரசர், புலவர், உபகாரிகள் முதலியோருடைய பெருமையையும் தனியே தொகுத்துப் பாடுவது ஒரு சம்பிரதாயமென்றும் அப்படிப் பாடிய நூலே சோழ மண்டல சதகமென்றும் அதனை இயற்றியவர் வேளூர் ஆத்மநாத தேசிகரென்றும் படிக்காசுப் புலவர் தொண்டை மண்டலச் சிறப்பைப் பாராட்டிப் பாடிய தொண்டை மண்டல சதகம் மிகவும் சிறந்ததென்றும் கூறினார்.

விடை பெற்றது

சில மணிநேரத்தில் சோழ மண்டல சதகம் முழுவதையும் நான் படித்து முடித்தேன். அதிலே குறிப்பிட்டுள்ள சில பழைய வரலாறுகள் விளங்கவில்லை.

அப்பால் பிள்ளையவர்கள் என்னை நோக்கி, “இப்படியே என்னுடன் மாயூரம் வரலாமல்லவா?” என்று கேட்டார்.

“இல்லை. புத்தகங்கள், வஸ்திரங்கள் முதலியன ஊரில் இருக்கின்றன. ஐயாவைப் பார்த்து எப்போது வரலாமென்று கேட்டுப் போகவே வந்தேன். போய் உடனே திரும்பிவிடுகிறேன்.”

“அவசரம் வேண்டாம். ஊருக்குப் போய் இன்னும் சில தினங்கள் இருந்துவிட்டே வரலாம். அதற்குள் நான் மாயூரம் போய்விடுவேன். அங்கே வந்துவிடலாம்.”