பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைமகள் திருக்கோயில்

297

எனக்கு எல்லாம் விளங்கின. சில நாட்களாகத் தாம் என்பால் காட்டிவந்த பராமுகத்துக்குத் தாமே பரிகாரம் தேடியவரைப்போல என் ஆசிரியர் விளங்கினார்.

அன்பை எவ்வளவு காலம் தடைப்படுத்த முடியும்? தடைப்படுத்தப்பட்ட அன்பு என்றாவது ஒரு நாள் மிகவேகமாக வெளிப்படத்தான் வேண்டும் அப்போது ஏற்படும் நிகழ்ச்சிகள் ஆச்சரியமாகவே இருக்கும்.

அத்தியாயம்—49

கலைமகள் திருக்கோயில்

மாயூரத்தில் வசந்தோத்ஸவமான பிறகு சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைக்குப் பரிவாரங்களுடன் திரும்பி வந்தனர். அவருடன் பிள்ளையவர்களும் நாங்களும் திருவாவடுதுறை வந்து சேர்ந்தோம். வழக்கப்படி மடத்திலே பாடங்கள் நடைபெற்று வந்தன.

தேசிகரின் பொழுது போக்கு

சுப்பிரமணிய தேசிகர் காலை எழுந்தது முதல் இரவில் துயிலச் செல்லும் வரையிற் பாடம் சொல்வது, வித்துவான்களோடு சம்பாஷணை செய்வது, மடத்திற்கு வருபவர்களுடைய குறைகளை விசாரித்து வேண்டிய உதவிகளைச் செய்வது ஆகிய விஷயங்களிலே பெரும்பாலும் பொழுதைப்போக்கி வந்தார்.

நீராடல்

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அவர் எழுந்துவிடுவார். சில சமயங்களில் ஒரு முதிய தம்பிரான் வந்து அவரை எழுப்புவார். எழுந்தவுடன் ஐந்து மணியளவுக்குக் காவிரிக்கு நீராடச் செல்வார். மடத்திலிருந்து காவிரித்துறை அரைமைல் தூரம் இருக்கும். நடந்தே செல்வார். ஆசனப் பலகை, மடி வஸ்திரப் பெட்டி முதலியவற்றுடன் தவசிப் பிள்ளைகளும் தம்பிரான்களும் உடன் செல்வார்கள். ஸ்நானம்செய்து திரும்பி வரும்போது, காவிரி சென்று ஸ்நான அனுஷ்டானாதிகளை முடித்துக்கொண்ட பிராமணர்களும் சைவர்களும் அவரைக் கண்டு பேசிக்கொண்டே உடன் வருவார்கள். காவிரிக்குச் செல்லும்பொருட்டு அமைக்கப்பெற்ற சாலையின் இரு பக்கங்களிலும் மருத மரங்கள் வளர்ந்திருக்கும். அம்மருதமரச்