பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகா வைத்தியநாதயர்

302

வருமானால் அதற்குத் தக்க காரணம் இருக்கும். மாணாக்கர்களில் யாருக்காவது குறை நேர்ந்தால் அதற்குக் காரணமானவரிடம் தேசிகருக்கு உண்டாகும் கோபம் மிகவும் கடுமையானது.

சர்வ கலாசாலை

மடத்தின் விஷயம் ஒன்றும் தெரியாத அயல்நாட்டார் ஒருவர் வந்து பார்த்தால் அவ்விடம் ஒரு சர்வகலாசாலையோ என்று எண்ணும்படி இருந்தது அக்காலத்து நிலை. அங்கே ஆடம்பரம் இல்லை; பெரிய விளம்பரங்கள் இல்லை; ஊரறியச் செய்யும் பிரசங்கங்கள் இல்லை; வேறு வேறாகப் பிரித்து வகுக்கும் பிரிவுகள் இல்லை. பொருள் இருந்தது; அதைத் தக்க வழியிலே உபயோகிக்கும் தாதா இருந்தார்; அவர் உள்ளத்திலே அன்பு நிறைந்திருந்தது; எல்லோரிடமும் ஒற்றுமை இருந்தது; கல்வி நிறைந்திருந்தது; வயிற்றுப் பசியையும் அறிவுப் பசியையும் போக்கி வாயுணவும் செவியுணவும் அளிக்கும் நித்தியோத்ஸவம் அங்கே நடந்து வந்தது.

அத்தகைய இடத்திலே கல்வி விளைந்து பெருகுவதற்குத் தடை என்ன? கலைமகள் களிநடம் புரியும் திருக்கோயிலாகவே அது விளங்கியது.


அத்தியாயம்—50

மகா வைத்தியநாதையர்

வ்வொரு நாளும் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் நேரம் போக மற்ற நேரங்களிற் பழைய பாடங்களைச் சிந்தித்து வருவது மாணாக்கர்கள் வழக்கம். சில சமயம் நான் ஆசிரியர் சொல்லும் புதிய பாடல்களையும் கடிதங்களையும் எழுதுவேன்.

தேசிகர் பாடம் சொல்லுதல்

அவகாசம் ஏற்படும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தாமே சிலருக்குப் பாடங் சொல்லுவார். திருக்குறள் பரிமேலழகருரையில் அவருக்கு மிக்க விருப்பம் உண்டு. அதனையும் திருக்கோவையார், இலக்கண விளக்கம் என்னும் நூல்களையும் யாருக்கேனும் பாடஞ் சொல்லுவார். தேசிகர் இலக்கணச் செய்திகளை வரையறையாகச் சொல்வதும் உரிய இடங்களில் வடமொழிப் பிரயோகங்களையும் வடநூற் செய்திகளையும் சொல்லுவதும் மிகவும் இனிமையாக இருக்கும்.