பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

என்‌ சரித்திரம்‌

சில குறிப்பிட்ட பாடங்களையே அவர் சொல்வார். ஆனால் அவற்றைத் திருத்தமாகச் சொல்வார். தமக்குப் புலப்படாத விஷயம் வந்தால், “பிள்ளையவர்களைக் கேட்க வேண்டும்” என்று வெளிப்படையாகச் சொல்வார்.

மகா வைத்தியநாதையர் பட்டம்பெற்ற வரலாறு

சில நாட்களில் இரவில் பாடம் நடவாதபோது சுப்பிரமணிய தேசிகரிடம் நான் போவதுண்டு. அப்பொழுது பிள்ளையவர்கள் சொல்லும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார்; என்ன என்ன அரிய விஷயங்கள் சொன்னார்கள் என்பதைக் கேட்டறிந்து பாராட்டுவார். பல பழைய வரலாறுகளைச் சொல்லுவார். நான் சங்கீதத்திற் பயிற்சியுடையவன் என்பதை அறிந்தவராதலின் சங்கீத வித்துவான்களைப் பற்றிய பல செய்திகளைச் சொல்லுவார்.

ஒரு நாள், “மகா வைத்தியநாதரைத் தெரியுமோ?” என்று அவர் கேட்டார்.

“அவர்களைப் பற்றி நான் கேட்டிருக்கிறேன்; நேரே பார்த்ததில்லை” என்றேன்.

“நீர் அவசியம் பார்த்து அவருடன் பழகவேண்டும். இம்மடத்துக்கு வேண்டியவர்களுள் அவர் முக்கியமானவர். தமிழ் விஷயத்தில் பிள்ளையவர்கள் எப்படியோ அப்படியே சங்கீதவிஷயத்தில் அவரைச் சொல்லவேண்டும். அவர் தமிழிலும் நல்ல பயிற்சியுள்ளவர். அவர் இங்கே அடிக்கடி வந்து நம்மை மகிழ்வித்துப் போவார்.”

‘அவர்களது சங்கீதத்தை இதுவரையில் கேளாமற்போனது என் துரதிர்ஷ்டமே” என்றேன்.

“அவரை முதலில் நாம் கல்லிடைக்குறிச்சியில் சின்னப்பட்டத்தில் இருந்தபோது பார்த்தோம். அப்பொழுது அவர் மிகவும் பால்யமாக இருந்தார். அப்போதே அவரிடத்தில் சங்கீதத் திறமை மிகுதியாக விளங்கியது. பெரிய வைத்தியநாதையர், சின்ன வைத்தியநாதையர் என்ற இரண்டு வித்துவான்களும் வேறு பலரும் வந்திருந்தனர். இவ்விடம் போலவே கல்லிடைக்குறிச்சியிலும் அடிக்கடி பல வித்துவான்கள் வந்து போவார்கள். ஒருநாள் ஒரு மகாசபை கூட்டி இந்த மூன்று வைத்தியநாதையர்களையும் பாடச் சொன்னோம். மற்றவர்களைவிட மகா வைத்தியநாதையருடைய சக்திதான் சிறந்ததாக இருந்தது. இவ்விஷயத்தை அவரோடு போட்டியிட்ட வித்துவான்களே ஒப்புக்கொண்டனர். அந்த மகா சபையில் எல்லா