பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகா வைத்தியநாதயர்

305

வித்துவான்களுடைய சம்மதத்தின் மேல் அவருக்கு ‘மஹா’ என்ற பட்டம் அளிக்கப்பெற்றது. அதற்கு முன் வெறும் வைத்தியநாதையராக இருந்த அவரை அன்று முதல்தான் யாவரும் மஹா வைத்தியநாதையரென்று அழைத்து வரலாயினர்.”

சுப்பிரமணிய தேசிகர் பின்னும் அச்சங்கீத வித்துவானுடைய பெருமைகளை எடுத்துக் கூறிவிட்டு, “மகா வைத்தியநாதையருடைய தமையனாராகிய இராமசுவாமி ஐயரென்பவர் தமிழிலே நல்ல அறிவுடையவர். செய்யுட்களும் கீர்த்தனங்களும் இயற்றுவார். பெரியபுராணம் முழுவதையும் கீர்த்தனங்களாகச் செய்திருக்கிறார். மகா வைத்தியநாதையருடைய தமிழறிவு விருத்தியாவதற்கு அவர் முக்கியமான காரணம்” என்றார்.

மகா வைத்தியநாதையரது பெருமையையும் அவரிடம் ஆதீனத்தலைவருக்கு இருந்த அன்பையும் நன்றாகத் தெரிந்துகொண்டது முதல் அப்பெரியாரைத் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. அவர் தமிழிலும் நல்ல அறிவுள்ளவரென்று தெரிந்தபோது என் விருப்பம் அதிகமாயிற்று. அது நிறைவேறும் காலம் வந்தது. ஒருநாள் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் என்னும் பெரியாருடன் அவர் மடத்திற்கு வந்தார்.

சுந்தர சுவாமிகள்

சுந்தர சுவாமிகள் என்பவர் அதிவர்ணாசிரமம் பூண்ட ஒரு துறவி. வேதாந்த கிரந்தங்களிலும், சிவபுராணங்களிலும் தேர்ந்த அறிவுள்ளவர். சூதசம்ஹிதையை அங்கங்கே விரிவாகப் பிரசங்கம் செய்து பலருடைய உள்ளத்தில் சிவபக்தியை விதைத்த பெரியார் அவர். திருவையாற்றோடு சார்ந்த ஸப்த ஸ்தான ஸ்தலங்கள் ஏழிலும் திருமழபாடியிலும் பல செல்வர்களைக்கொண்டு திருப்பணிகள் செய்வித்து அந்த எட்டு ஸ்தலங்களுக்கும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த எண்ணிய அப்பெரியார் அதன் பொருட்டுத் தமிழ்நாட்டிலுள்ள சிவநேசச் செல்வர்களிடம் பொருளுதவி பெற்று வந்தனர்.

அவருடைய சிஷ்யர்கள் பலர். எல்லா வகுப்பினரிலும் அவருக்குச் சிஷ்யர்கள் உண்டு. மகா வைத்தியநாதையர் அவரிடம் மந்திரோபதேசம்பெற்றுச் சில வேதாந்த நூல்களையும் பாடங் கேட்டனர். திருநெல்வேலியில் ஐயாசாமி பிள்ளை என்னும் அன்பர் அவருடைய உபதேசம் பெற்று ஒரு மடம் கட்டிக்கொண்டு தத்துவ விசாரமும் ஞானசாதனமும் செய்து வாழ்ந்து வந்தார். தத்துவராயர்

என்-20