பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

என் சரித்திரம்

இயற்றிய பாடுதுறை முதலிய நூல்களில் ஆழ்ந்த பயிற்சியுள்ளவர் அவர்.

திருவாவடுதுறைக்குச் சுந்தர சுவாமிகள் வந்தது கும்பாபிஷேகத்திற்குப் பொருளுதவிபெறும் பொருட்டே. அவருடன் மகா வைத்தியநாதையர், திருநெல்வேலி ஐயாசாமி பிள்ளை முதலிய பலர் வந்தனர். பிள்ளையவர்களுக்கும் சுந்தர சுவாமிகளுக்கும் முன்பே பழக்கம் உண்டு. பிள்ளையவர்கள் தமிழில் சூதசம்ஹிதையை மொழிபெயர்த்து இயற்றியிருப்பது தெரிந்து அதிலுள்ள செய்யுட்களை மகா வைத்தியநாதையர் மூலமாகக் கேட்டு அதன் சுவையில் ஈடுபட்டுச் சுந்தர சுவாமிகள் பாராட்டுவார். வடமொழிச் சூதசம்ஹிதையில் நிரம்பிய ஞானமுள்ள அவருக்குத் தமிழ்நூலின் பெருமை நன்றாக வெளிப்பட்டது. அவர் தம்முடைய பிரசங்கங்களில் இடையிடையே தமிழ்ச் சூதசம்ஹிதையிலிருந்தும் சில செய்யுட்களைச் சொல்வதுண்டாம்.

சுவாமிகள் தம் பரிவாரத்துடன் ஓரிடத்தில் தங்கிச் சுப்பிரமணிய தேசிகரை எப்பொழுது பார்க்கலாம் என்று விசாரித்து வர ஒருவரை அனுப்பினார். அதற்குள் அவருடைய வரவை அறிந்த எங்கள் ஆசிரியர் அவர் இருந்த இடத்திற்கு வந்து அவரை வந்தனம் செய்தார்.

சுவாமிகளும் தேசிகரும்

அப்பால் இருவரும் சைவ சம்பந்தமான அரிய விஷயங்களைப் பற்றி ஒருவரோடொருவர் சிலநேரம் மிக அழகாகப் பேசிக்கொண்டார்கள். எங்களுக்கு அச்சம்பாஷணையால் பல நூதன விஷயங்கள் தெரியலாயின.

சுப்பிரமணிய தேசிகர் தம் வரவை எதிர்பார்த்திருக்கிறார் என்றறிந்து சுவாமிகளும் பிறரும் எழுந்து சென்றார்கள். தேசிகர் ஒடுக்கத்தின் வாயிலுக்கு வந்து சுவாமிகளை வரவேற்று அழைத்துச் சென்று அவரை இருக்கச்செய்து தாமும் ஆசனத்தில் அமர்ந்தார். அவர் உத்தரவுப்படியே யாவரும் அருகில் இருந்தனர். அக்கூட்டத்தில் இருந்த நான் மகா வைத்தியநாதையர் முகத்தையும் சுந்தர சுவாமிகள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

தேசிகரும் சுவாமிகளும் முதலில் முகமன் கூறிக்கொண்டு அப்பால் பல விஷயங்களைப் பற்றிப் பேசினர். தாம் வந்த