பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிதம்பரம் பிள்ளையின் கலியாணம்

309

இணையற்ற இன்பம்

அதுவரையில் அடைந்திராத இன்பத்தை அன்று அடைந்தேன். ‘இவர்களுடனே போய் இருந்து சங்கீத அப்பியாசம் செய்யலாமா?’ என்ற ஆசைகூட இடையே தோற்றியது. ஒருவாறு மகா வைத்தியநாதையரது கான மழை நின்றது. சுந்தர சுவாமிகள் விடைபெற்றுக்கொண்டனர். அவரோடு மகா வைத்தியநாதையரும் பிறரும் விடைபெற்று எழுந்தனர். அவர்கள் யாவரும் மடத்தில் அவரவர்களுக்குரிய இடத்தில் விருந்துண்டு பிற்பகலில் திருவையாற்றுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அன்று பிற்பகலில் சுப்பிரமணிய தேசிகரை நான் பார்த்த போது, “காலையில் மகா வைத்தியநாதையர் பாட்டைக் கேட்டீரா?” என்று அவர் கேட்டார். “இந்த மாதிரி சங்கீதத்தை இதுவரை நான் கேட்டதே இல்லை. அவர்களுடைய சாரீரம் எல்லோருக்கும் அமையாது. வெறும் சாதகத்தால்மட்டும் வந்ததன்று அது” என்றேன்.

“சாதகம் மாந்திரம் போதாதென்பது உண்மைதான். அவர் நல்ல சிவபக்தர். சிவகிருபை அவருக்கு நல்ல சாரீரத்தை அளித்திருக்கிறது. அவர் செய்துவரும் அப்பியாசம் அந்தச் சாரீரத்திற்கு வளப்பத்தைத் தருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது தூய்மையான ஒழுக்கம் அந்தத் திவ்விய சாரீரத்தின் அழகு கெடாமல் பாதுகாக்கிறது” என்று சொல்லிவிட்டு, “அவர் தமிழறிவும் உமக்குப் புலப்பட்டிருக்குமே!” என்றார்.

“ஆம், அவர் பாடல் சொல்லும்போதே பொருள் தெளிவாகிறது” என்றேன்.

அத்தியாயம்—51

சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்


திருவாவடுதுறையில் இரண்டு பிரிவாக நடைபெற்று வந்த பாடங்களில் சின்ன வகைக்குரிய பாடம் பழனிக்குமாரத் தம்பிரான், ஆறுமுகத் தம்பிரான் முதலியவர்கள் விரும்பியபடி சில தினங்களுக்குப் பிறகு காலையிலே நடைபெற ஆரம்பித்தது. குமாரசாமித் தம்பிரானும் நானும் கேட்டு வந்த பாடம் பிற்பகலிலும் முன்னிரவிலும் நடந்தது. அப்பாடத்தில் திருநாகைக் காரோணப்