பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

என் சரித்திரம்

என்று சொல்லிச் சிரித்தபடியே அம்மாணாக்கரைப் பார்த்தார். அவர் தம் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டார்.

பிறகு குமாரசாமித் தம்பிரான் எனக்கு விஷயத்தை விளக்கினபோது நானும் அவரோடு சேர்ந்து சிரித்தேன். அதுமுதல் அம்மாணாக்கரை நாங்கள் ‘சேய்ஞலூர் இந்திரன்’ என்றே அழைத்து வரலானோம்.

சிதம்பரம்பிள்ளையின் விவாக முயற்சி

என் ஆசிரியருக்குச் சிதம்பரம் பிள்ளை என்று ஒரு குமாரர் இருந்தார். அவருக்குத் தக்க பிராயம் வந்தபிறகு கலியாணம் செய்வதற்குரிய முயற்சிகள் நடைபெற்றன. சீகாழியிலிருந்த குருசாமி பிள்ளை என்பவருடைய பெண்ணை நிச்சயம் செய்து மாயூரத்திலேயே கலியாணம் நடத்த ஏற்பாடாகியிருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரும் மடத்து உத்தியோகத்தில் இருந்த தம்பிரான்களும் வேறு கனவான்களும் பொருளுதவி செய்தனர். கலியாண ஏற்பாடுகளையெல்லாம் கவனிக்கும்பொருட்டு ஆசிரியர் மாயூரத்திற்குச் சென்றார். நானும் உடன் சென்றேன்.

ஸ்ரீ நமச்சிவாய தேசிகர்

அயலூரிலுள்ள கனவான்கள் பலருக்கு விவாக முகூர்த்த பத்திரிகை அனுப்பப் பெற்றது. சிலருக்கு விரிவான கடிதங்களும் எழுதப்பட்டன. ஒவ்வொரு கடிதத்திலும் தலைப்பில் ஒரு புதிய பாடலை எழுதச் செய்தல் ஆசிரியர் வழக்கம். அக்கடிதங்களை எல்லாம் எழுதியவன் நானே. கல்லிடைக்குறிச்சியில் சின்னப் பண்டார ஸந்நிதியாக இருந்த ஸ்ரீ நமச்சிவாய தேசிகருக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கும்போது அவர் விஷயமாக ஐந்து பாடல்களைச் சொன்னார். கடிதம் எழுதியபிறகு நமச்சிவாய தேசிகருடைய இயல்புகளை எனக்கு எடுத்துக் கூறினார்:-

“ஸ்ரீ நமச்சிவாய தேசிகர் நல்ல கல்வி அறிவுள்ளவர். தமிழிலும் வடமொழியிலும் ஆழ்ந்த பயிற்சியுடையவர். இடைவிடாமற் பாடஞ் சொல்லுபவர். லௌகிகத்திலும் திறமையுள்ளவர். கல்லிடைக்குறிச்சியில் இருந்துகொண்டு பல சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறார். அவரை யாராலும் ஏமாற்ற முடியாது உம்மைக் கண்டால் அவர் மிகவும் சந்தோஷிப்பார்.”

“திருவாவடுதுறையில் இராமல் கல்லிடைக்குறிச்சியில் இருப்பதற்குக் காரணம் என்ன?” என்று நான் கேட்டேன்.