பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மை வடு

327

பிறகு வரலாம்” என்று சொல்லி வந்தார். “இவர் நம்மை மீட்டும் ஊருக்கு அனுப்பிவிடுவாரோ!” என்று அஞ்சினேன்.

“ஆனாலும் இவரைப் பிரிந்திருப்பது எனக்குச் சிரமமாகவே இருக்கிறது. இவர் ஊருக்குப் போன பிறகு நானும் சில ஊர்களுக்குப் போய் வந்தேன். அப்பால் குருபூஜை வந்தது. பின்பு மகாமகம் வந்தது. பாடம் நடக்கவில்லை. இனிமேல் பாடத்தை நிறுத்தி வைப்பது உசிதமன்று. ஒரு யோசனை தோன்றுகிறது. தாங்கள் அப்படிச் செய்தால் அனுகூலமாக இருக்கும்” என்று ஆசிரியர் என் தந்தையாரை நோக்கி மனுபடியும் கூறினார்.

“என்ன செய்ய வேண்டும்?”

“இவருடைய தாயாரை அழைத்துக்கொண்டு பூஜையோடு வந்து தாங்கள் இவ்விடம் சிலகாலம் இருந்து இவரைக் கவனித்துக்கொண்டால் நலமாக இருக்கும்.”

“அப்படியே செய்கிறேன். அதில் என்ன கஷ்டம் இருக்கிறது?” என்று என் தந்தையார் உடன்பட்டார். அப்போது எனக்கு உண்டான மகிழ்ச்சி எல்லையற்றது.

தந்தையார் உடனே விடைபெற்றுச் சென்று என் தாயாரை அழைத்து வந்தார். பிள்ளையவர்கள் நாங்கள் இருப்பதற்கு வேண்டிய வசதிகளை மடத்துக் காரியஸ்தர்களைக்கொண்டு திருவாவடுதுறையில் செய்வித்தார்.

மீண்டும் பெரியபுராணப் பாடம் வழக்கம்போல் நடந்தது. நன்னூல் விருத்தியுரையைச் சிலரும் காண்டிகையுரையைச் சிலரும் பாடங்கேட்டு வந்தனர். அவர்களுடன் நானும் கலந்துகொண்டேன்.

இரண்டு மாணாக்கர்கள்

பிள்ளையவர்களிடம் மற்ற மாணாக்கர்களோடு இரண்டு அபிஷேகஸ்தர்களும் பாடங் கேட்டனர். அவர்கள் இருவர்பாலும் மாணாக்கர்களிற் சிலர் வெறுப்புக்கொண்டவர்களைப்போல நடந்து வந்தனர். முதலில் அதற்குக் காரணம் எனக்கு விளங்கவில்லை; பிறகு தெரிந்தது. என் ஆசிரியர் திருவிடைமருதூருலாவை இயற்றி அரங்கேற்றிய காலத்தில் அவ்விருவரும் பலவகையான இடையூறுகளை விளைவித்தார்களாம். “சிவபெருமான் திருவீதியிலே செல்லும்போது பேதை முதல் பேரிளம் பெண் இறுதியாக உள்ள ஏழுபருவ மகளிரும் காமுற்றார்கள்” என்ற செய்தி அவ்வுலாவில்