பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

என் சரித்திரம்

ஓரிடத்தில் வைத்துவிட்டுப் போய்ச் சில நேரத்திற்குப் பின் வந்தேன். அந்த இடைக்காலத்தில் அவர் தம் மனத்துக்குள்ளே மேலே சொல்லவேண்டிய பாடல்களுக்குரிய கருத்தை ஆராய்ந்து வைத்துக்கொண்டார். ஆதலால் நான் வந்தவுடனே ஒன்றும் சொல்லாமல் பாடல் சொல்லத் தொடங்கினார். நான் ஏட்டையும் எழுத்தாணியையும் பார்த்தபோது ஏடு மாத்திரம் இருந்தது; எழுத்தாணி காணப்படவில்லை. சுற்றிலும் பார்த்தேன். நான் பாடலை எழுதாமல் இப்படிப் பார்ப்பதைக் கண்ட ஆசிரியர், “ஏன்? என்ன தேடுகிறீர்?” என்றார். நான் விஷயத்தைத் தெரிவித்து, “யாராவது எடுத்து வைத்திருக்கலாம் விசாரித்து வாங்கி வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றேன். என் எழுத்தாணியை எங்கும் காணவில்லை. அங்கே இருந்த கணக்குப் பிள்ளையைக் கேட்டேன். அவர் தமக்குத் தெரியாதென்று சொல்லிவிட்டார். வேறு ஏதாவது ஓர் எழுத்தாணி இருந்தால் தரவேண்டுமென்று கேட்டபோது அவர் தமது எழுத்தாணியை வீட்டில் வைத்திருப்பதாகச் சொன்னார்.

முதல்முறை பட்டீச்சுரத்தில் இருந்தபோது ஆறுமுகத்தாபிள்ளை என் புஸ்தகத்தை ஒளித்து வைத்த செய்தி என் ஞாபகத்திற்கு வந்தது. “இன்னும் அத்தகைய கஷ்டம் நம்மை விடாதுபோலத் தோன்றுகிறதே” என்று என் மனம் நடுங்கியது; ஒன்றும் தோன்றாமல் பிள்ளையவர்கள் முன் வாடிய முகத்தோடு வந்து எழுத்தாணி அகப்படவில்லை என்று தெரிவித்தேன். தாம் மனத்தில் ஒழுங்குபடுத்திக்கொண்ட செய்யுட்களைச் சொல்லவேண்டுமென்று என் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவருக்கு இது மிக்க வருத்தத்தை உண்டாக்கியது. கவிஞர் பாடலை இயற்றச் சிந்தனை செய்வாரா? இக்கவலைகளில் மனத்தைச் செலுத்துவாரா?

அப்போது அங்கே ஆறுமுகத்தா பிள்ளை வந்தார். “ஏன் இவர் ஒன்றும் எழுதாமல் இப்படி அலைகிறார்?” என்று கேட்டார். பிள்ளையவர்கள் காரணம் சொன்னபோது, “இவர் அதிக அஜாக்கிரதையுள்ளவர். புஸ்தகத்தையோ, எழுத்தாணியையோ இவர் பத்திரமாக வைத்துக்கொள்வதில்லை. உங்களிடம் எவ்வளவோ தடவை சொல்லியிருக்கிறேன். இவர் எதற்கும் உதவாதவர்” என்று தம்முடைய விமரிசனத்தை ஆரம்பித்துவிட்டார். “மறுபடியும் அகப்பட்டுக் கொண்டோமே” என்ற சஞ்சலம் எனக்கு உண்டாயிற்று.

ஆறுமுகத்தா பிள்ளையின் உத்தரவு

பிள்ளையவர்கள் அவரிடம் சமாதானமான வார்த்தைகள் கூறி அவரைச் சாந்தப்படுத்தின பிறகு, “எங்கே, இவர் எழுத்தாணி