பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

என் சரித்திரம்

உடன் சென்றேன். நல்லூரில் சுவாமிதரிசனம் செய்த பிறகு ஆசிரியர் என்னைப் பார்த்து, “உத்தமதானபுரம் இங்கேதானே இருக்கிறது! இங்கிருந்து எவ்வளவு தூரம் இருக்கும்?” என்று கேட்டார். நான் உடனே மிகவும் சந்தோஷமாக, “இதற்கு மேற்கே அரைமைல் தூரத்தில் இருக்கிறது; ஒரு நாழிகையிற் போய்விடலாம்” என்றேன்.

உடனே அவ்விருவரும் புறப்பட்டனர். அவ்விருவரையும் நான் அழைத்துக்கொண்டு ஊர்போய்ச் சேர்ந்தேன். ஊரில் என் பெற்றோர் முதலியவர்கள் திடீரென்று எங்களைப் பார்த்தபோது அளவற்ற சந்தோஷமடைந்தனர். அப்போது காலை பத்துமணி இருக்கும். உடனே என் பெற்றோர்கள் பிள்ளையவர்களுக்கும் ஆறுமுகத்தா பிள்ளைக்கும் ஒரு விருந்து செய்விக்க எண்ணி அதற்கு வேண்டியவற்றைக் கவனித்தார்கள். அவர்கள் இருவருக்கும் திருப்தியாக இருக்க வேண்டுமே என்று கருதி நானும் அம்முயற்சியில் இருந்தேன். என் சிறிய தந்தையாரும் மிக்க ஊக்கத்துடன் இருந்தார். அப்போது ஊராரும் இன்றியமையாத உதவியைச் செய்தார்கள்.

நாங்கள் செய்த விருந்து

எவ்விதமாக ஆகாரமாக இருந்தாலும் உள்ளன்பையே பெரிதாகக் கவனிப்பது என் ஆசிரியர் இயல்பு. ஆறுமுகத்தா பிள்ளையோ வெளிப்பகட்டான காரியங்களை விரும்புகிறவர். உபசாரங்களில் ஏதேனும் குறைவு இருந்தால் அவருக்கு வருத்தம் உண்டாகும். பிள்ளையவர்களுடன் வேறு சில இடங்களுக்குச் சென்றபோது அங்கே நிகழ்ந்த உபசாரங்களை ஆறுமுகத்தா பிள்ளை கவனித்து ஆராய்ந்து குறைகூறியதை நான் பார்த்ததுண்டு.

ஆகையால் அவர் மனம் திருப்தி அடையும்படி நடக்க வேண்டுமே என்ற கவலைதான் எனக்குப் பெரிதாக இருந்தது. ஏதோ ஒருவாறு அவர்களுக்கு விருந்து நடந்தது. ஆசிரியர் மிக்க திருப்தியைப் புலப்படுத்தினார். ஆறுமுகத்தா பிள்ளை அதிருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை. என் தந்தையார் பிள்ளையவர்களோடு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்பு அவரும் சிறிய தந்தையாரும் சில தமிழ்ப்பாடல்களையும் அருணாசலகவி ராமாயண கீர்த்தனங்களையும் இசையுடன் பாடினார்கள். ஆசிரியர் கேட்டு மிகவும் மகிழ்ந்தனர். ஊரிலுள்ளவர்களெல்லாம் வந்து வந்து பிள்ளையவர்களைப் பார்த்துச் சென்றார்கள்; என் படிப்பின் வளர்ச்சியையும் தெரிந்துகொண்டார்கள். அன்று எங்கள் வீடு