பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அத்தியாயம்—58

எனக்கு வந்த ஜ்வரம்

திருப்பெருந்துறையில் புராண அரங்கேற்றம் ஒரு நல்லநாளில் ஆரம்பிக்கப்பெற்றது. சுப்பிரமணியத் தம்பிரான் அதன்பொருட்டு மிகவிரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அயலூர்களிலிருந்து கனவான்களும் வித்துவான்களும் சிவநேசச் செல்வர்களும் திரள்திரளாக வந்திருந்தனர்.

குதிரைஸ்வாமி மண்டபத்தில் அரங்கேற்றம் நடைபெறலாயிற்று. அப்போது நானே பாடல்களை இசையுடன் படித்துவந்தேன். பாடஞ் சொல்லும்போதும் மற்ற சமயங்களிலும் தமிழ்ப்பாடல்களைப் படிக்கும் வழக்கம் எனக்கு இருப்பினும் அவ்வளவு பெருங்கூட்டத்தில் முதன்முறையாக அன்றுதான் படிக்கத் தொடங்கினேன். கூட்டத்தைக் கண்டு எனக்கு அச்சம் உண்டாகவில்லை; ஊக்கமே உண்டாயிற்று.

அரங்கேற்றம்

ஒவ்வொரு நாளும் பிற்பகலில் அரங்கேற்றம் நடைபெறும்; பெரும்பாலும் ஐந்துமணி வரையில் நிகழும். சில நாட்களில் சிறிது நேரம் அதிகமாவதும் உண்டு. அங்கே வந்திருந்தவர்கள் அடிக்கடி வந்துவந்து பேசி வந்தமையால் மற்ற வேளைகளிலும் என் ஆசிரியருக்கு ஓய்வே இல்லை.

புராணத்திலே சில படலங்களே இயற்றப்பெற்றிருந்தன. நாள்தோறும் அரங்கேற்றம் நடந்தமையால் மேலும்மேலும் செய்யுட்களை இயற்றவேண்டியது அவசியமாக இருந்தது. ஆனாலும் ஆசிரியர் அவ்விஷயத்தைப் பற்றிக் கவலை அடைந்தவராகத் தோற்றவில்லை. வந்தவர்களோடு சம்பாஷணை செய்வதிற் பெரும்பான்மையான நேரம் போயிற்று.

முன்பே இயற்றப்பெற்றிருந்த பாடல்கள் எல்லாம் அரங்கேற்றி ஆயின. மறுநாள் அரங்கேற்றுவதற்குப் பாடல்கள் இல்லை. நான் இந்த விஷயத்தை இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிவித்தேன். ஆசிரியர், “பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லி அதைப்பற்றிய முயற்சியில் ஈடுபடாமல் இருந்தார்.

“காலையில் பாடி, மாலையில் அரங்கேற்றுவது இவர்களுக்குச் சுலபமாக இருக்கலாம். ஆனால் காலையில் ஓய்வு எங்கே