பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360

என் சரித்திரம்

உத்தியோகம் தேடித் தர வேண்டும் என்று சொன்னேன். அப்போது அவர், “நான் ஒரு மாசம் ஓய்வெடுத்துக்கொள்வதாக எண்ணியிருக்கிறேன். அப்போது என் ஸ்தானத்தில் இருந்து வேலைபார்ப்பீரா?” என்று கேட்டார். நான் தைரியமாக, “பார்ப்பேன்” என்றேன். “சரி; கோபால ராவ் அவர்களிடம் சொல்லுகிறேன்” என்று அவர் சொன்னார். நான் அதுகேட்டுச் சந்தோஷமடைந்தேன். ஆனால் அந்த யோசனை நிறைவேறவில்லை. கோபாலராவ், “இவர் பால்யராக இருக்கிறார்; பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார். நான் ஏமாற்றமடைந்து ஊருக்குத் திரும்பி வந்தேன்.

உத்தமதானபுரத்தில் இருப்பதைவிடச் சூரியமூலையிற்போய் இருந்தால் ஆகார விஷயத்திலாவது குறைவில்லாமல் இருக்குமென்று கருதி நானும் என் தாய், தந்தையரும் பங்குனி மாதம் அங்கே போய்ச் சேர்ந்தோம். என் தேகசௌக்கியம் இயல்பான நிலைக்கு வாராமையால் எங்கேனும் செல்வதற்கோ பொருள்தேட முயல்வதற்கோ இயலவில்லை. “எப்படிக் கடனைத் தீர்ப்பது?” என்ற யோசனை என்னைப் பலமாகப் பற்றிக்கொண்டது.

தந்தையார் கூறிய உபாயம்

என் தந்தையார் ஓர் உபாயம் சொன்னார். “செங்கணம் முதலிய இடங்களுக்குச் சென்று ஏதேனும் புராணப்பிரசங்கம் செய்தால் பணம் கிடைக்கும்; அதனைக்கொண்டு கடனைத் தீர்த்து வரலாம்” என்று அவர் கூறினார். அவர் தம் அனுபவத்தால் அறிந்த விஷயம் அது. தாம் அப்பக்கங்களில் சஞ்சாரம்செய்து கதாப்பிரசங்கங்கள் செய்ததுபோல் நானும் செய்தால் நன்மை உண்டாகுமென்று அவர் நினைத்தார்; தாம் செய்த காரியத்தை நானும் ‘வாழையடி வாழை’யாகச் செய்ய வேண்டுமென்று அவர் முன்பு எண்ணிய எண்ணம் அப்போது நிறைவேறக் கூடுமென்பது அவர் நம்பிக்கை.

எனக்கு அவர் கூறியது உசிதமாகவே தோற்றியது. புதிய உத்தியோகம் ஒன்றை வகித்துப் புதிய மனிதர்களுடன் பழகுவதைக் காட்டிலும் பழகிய இடத்திற் பரம்பரையாக வந்த முயற்சியில் ஈடுபடுவது சுலபமன்றோ? செங்கணம் முதலிய இடங்களில் உள்ளவர்களின் இயல்பை நானும் உணர்ந்திருந்தேன். தமிழ் நூல்களைப் பிரசங்கம் செய்தால் மிக்க மதிப்பும் பொருளுதவியும் கிடைக்குமென்பதையும் அறிவேன். ஆயுள் முழுவதும் புராணப்