பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

என் சரித்திரம்

சிற்பிகளைக்கொண்டு அக்கோயிலை நிருமித்தாரென்றும் ஒருநாள் சிற்பியர் தலைவன் வேலை செய்திருந்தபோது அவனை அறியாமல் அவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்தாரென்றும் அவருடைய உயர்ந்த குணத்தைஅறிந்த அவன் அதுவரைக்கும் கட்டியவற்றைப் பிரித்து மீட்டும் சிறந்த வேலைப்பாடுகளுடன் அமைத்தானென்றும் சொன்னார்; என்னை வெங்கனூருக்கு வந்துசெல்ல வேண்டுமென்று கூறினார். நான் அங்ஙனம் செய்வதில் மிக்க ஆவலுள்ளவனாக இருந்தும் போவதற்கு ஓய்வே கிடைக்கவில்லை.

வேதாந்த மடத்துத் தலைவர்

ஒருநாள் துறையூர் வேதாந்த மடத்துத் தலைவர் காரைக்கு வந்து மீனம்மாள் வீட்டில் தங்கியிருந்தார். நான் அவரைப் பார்க்கச் சென்றேன். அப்பொழுது அவர் தம் மாணாக்கர்களுக்கு வேதாந்த பாடஞ் சொல்லி வந்தனர். என்னைக் கண்டவுடன் தம் மாணாக்கர்களால் என்னை அறிந்துகொண்டு பாடம் சொல்வதை நிறுத்திவிட்டுச் சிறிதுநேரம் அன்போடு பேசினர். அம்மடாதிபதி மிக்கமதிப்பும் தகுதியும் உடையவர். அவர் எனக்காகப் பாடஞ் சொல்லியதை நிறுத்தியதும் என்னோடு பேசியதும் உடன் இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை விளைவித்தன. அவரும் புராணம் நடைபெறும்போது வந்து கேட்டுச் சென்றார்,

இவ்வாறு ஒவ்வொரு நாளும் சந்தோஷமாகச் சென்றது.

அத்தியாயம்—60

அம்பரில் தீர்ந்த பசி

செங்கணத்திலிருந்து காரைக்குப் புறப்படுகையில் விருத்தாசல ரெட்டியாரிடம் பாகவதம், கம்பராமாயணம், திருக்கோவையார். திருக்குறள் ஆகியபுஸ்தகங்களை இரவலாக வாங்கிப் போயிருந்தேன். பாகவதம் மாத்திரம் ஏட்டுப் பிரதியாக இருந்தது. காரையில் பகல் வேளைகளில் அவற்றையும் என்னிடமிருந்த வேறு நூல்களையும் படித்து இன்புற்றேன். பாகவதம் படித்தபோது முதல் ஸ்கந்தமும் தசம ஸ்கந்தமும் என் மனத்தைக் கவர்ந்தன. கிருஷ்ணசாமி ரெட்டியார் தெலுங்கு பாகவதத்தைப் படித்து அதிலுள்ள விஷயங்களைச் சொல்வார். தமிழ்ப் பாகவதத்திலுள்ள சில சந்தேகங்களை அவர் கூறிய செய்திகளால் நீக்கிக்கொண்டேன்