பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேசிகர் சொன்ன பாடங்கள்

403

உழைத்துப் படியுங்கள். படிப்பதற்காக இங்கே வந்திருப்பவர்களுக்கு அவர்கள் எந்த எந்த நூலைப் பாடங் கேட்க விரும்புகிறார்களோ அவற்றை அறிந்து தகுதிக்கேற்றபடி பாடஞ் சொல்லி வாருங்கள். பாடஞ் சொல்லுவதால் உங்கள் கல்வி அபிவிருத்தி அடையும்” என்று சொல்லி அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர். என் சகபாடியாகிய குமாரசாமித் தம்பிரான் முதலியவர்களிடத்தும் இவ்வாறே கட்டளையிட்டார். அவ்வாறே செய்து வரலானோம்.

கம்பராமாயணம்

நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் பிறரும் பிள்ளையவர்கள் தங்கியிருந்த வீட்டையே எங்கள் இடமாகக் கொண்டு படித்தும் பாடஞ் சொல்லியும் வந்தோம். பாரதம், பாகவதம், திருக்குற்றாலப் புராணம் முதலிய காவியங்களையும் பலவகையான பிரபந்தங்களையும் படித்து ஆராய்ந்தோம். கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் ஒரு பகுதி வரையில் முன்பு பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டிருந்தோம். மேலே அந்நூலை முற்றும் படித்து விடவேண்டும் என்ற ஆவல் எங்களுக்கு எழுந்தது. அதனால் பிள்ளையவர்களுடைய ஏட்டுப் பிரதியையும், மடத்தில் உள்ள ஏட்டுப் பிரதிகளையும் வைத்துக்கொண்டு இரண்டு தடவை முற்றும் படித்தோம். படித்த காலத்தில் கண்ட பாடபேதங்களைக் கைப்புத்தகத்திலும் வேறு கடிதத்திலும் தனித்தனியே குறித்து வைத்தோம்.

நன்னூற் பாடம்

சுப்பிரமணிய தேசிகரிடம் நாங்கள் இலக்கண நூல்களையும் சைவ சித்தாந்த சாஸ்திரங்களையும் சில இலக்கியங்களையும் பாடம் கேட்டோம். நன்னூல் விருத்தியுரையைப் பாடம் கேட்க விரும்பியபோது சுப்பிரமணிய தேசிகர் அதன் சம்பந்தமாகச் சில விஷயங்களைச் சொல்லலானார்; “நன்னூலுக்கு முதலில் சங்கர நமச்சிவாயர் உரை எழுதினார். பிறகு சிவஞான முனிவர் அதைத் திருத்தியும் புதுக்கியும் விருத்தியுரையை அமைத்தார். அவர் தாம் எழுதிய சிவஞானபோத திராவிட மகாபாஷ்யத்தில் அமைத்துள்ள அரிய வடமொழி தென்மொழிப் பிரயோகங்களை எளிதிற் பிற்காலத்தவர்க்குப் புலப்படுத்த நினைந்து இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி என்னும் நூல்களிலும் பிறவற்றிலும் உள்ள முக்கியமான சிலவற்றை அவ்வுரையில் அங்கங்கே சேர்த்தார். சில இடங்களில் சிலவற்றைக் குறைத்தும் சிலவற்றை மாற்றியும் எழுதி நிறைவேற்றினார். இலக்கணக் கொத்து முதலிய மூன்றையும் பாடம் கேட்ட பிறகுதான்