பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410

என் சரித்திரம்

பெறும். இடையிடையே பாடல்கள் சொல்வதும், பொருள் கூறுவதுமாகிய செயல்கள் நிகழும்போது, வந்தவர்களில் யாருக்கேனும் தமிழ்ப் பழக்கமே இல்லாவிடினும் அப்பால் அவருக்குத் தமிழன்பு ஏற்பட்டு விடும். “இந்த இடத்திற்குத் தமிழறிவு இல்லாமல் வருவது பெருங்குறை. அடுத்த முறை வரும்போது தமிழில் எதையாவது தெரிந்து கொண்டு வரவேண்டும்” என்று உறுதி செய்து கொள்வார்.

மடத்துக்கு முதல் முறையாக வரும் வித்துவான்கள் அங்கே பெறும் ஆதரவால் இரண்டா முறை வரும்போது கல்வி அறிவில் ஒரு படி உயர்வு பெற்று அதற்கு ஏற்ற பரிசைப் பெற வேண்டுமென்ற ஊக்கத்தைக் காட்டுவார்கள். வரும் கனவான்களோ அடுத்த முறை வரும்போது தாமும் தமிழ் நூல்களைப் பற்றி ஏதேனும் பேசுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்து கொண்டு வருவார்கள். இருவகையினரும் மடத்துப் பழக்கத்தால் லாபத்தையே பெற்றனர்.

வேதநாயகம் பிள்ளை

மாயூரத்தில் முன்சீபாக இருந்த வேதநாயகம் பிள்ளை சில முறை திருவாவடுதுறை மடத்துக்கு வருவதுண்டு. அப்பொழுதெல்லாம் அவர் சுப்பிரமணிய தேசிகர் விஷயமாகப் பாடல்களை இயற்றி வருவார். அவற்றை நான் படித்துக் காட்டுவேன். எளிய நடையில், கேட்பவர்கள் விரைவிற் பொருளை உணர்ந்து இன்புறும் படி அப்பாடல்கள் இருக்கும். ஒரு கிறிஸ்தவ கனவான் சைவ மடாதிபதியைப் புகழ்வதென்றால் அது மிகவும் அரிய செய்தி யன்றோ? அன்றியும் பொறுப்புள்ள அரசாங்க உத்தியோகம் ஒன்றை வகித்து வந்தவரும், பிறரை அதிகமாக லக்ஷியம் செய்யாதவருமான வேதநாயகம் பிள்ளை பாடினாரென்பது யாவருக்கும் வியப்பை உண்டாக்கியது.

பிள்ளையவர்களுடைய மாணாக்கராகிய வேதநாயகம் பிள்ளை அப்புலவர் மூலமாகத் திருவாவடுதுறை மடத்தின் பெருமையையும், அதன் தலைவருடைய கல்வியறிவு ஒழுக்கச் சிறப்புக்களையும் உணர்ந்திருந்தார். தாமே நேரில் பார்த்தபோது அம்மடம் தமிழ் வளர்க்கும் நிலயமாக இருப்பதை அறிந்தார். இவற்றால் சுப்பிரமணிய தேசிகரிடம் அவருக்கு நல்ல மதிப்பு உண்டாயிற்று.

தேசிகரை அவர் பாராட்டி, “இங்கிலீஷ் பாஷை தலையெடுத்து வரும் இக்காலத்தில் தமிழைப் பாதுகாத்து விருத்தி செய்ய