பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மடத்துக்கு வருவோர்

411

நானென்று கங்கணங்கட்டிக்கொண்டாய்” என்ற கருத்தமைய ஒரு செய்யுள் பாடியிருக்கிறார். அது வருமாறு:-

“வானென் றுதவ வருஞ்சுப்ர மண்ய வரோதயனே
தானென்று வெண்ணரன் பாஷையிந் நாட்டிற் றலையெடுக்க
ஏனென்று கேட்பவ ரில்லாத் தமிழை இனிதளிக்க
நானென்று கங்கணங் கட்டிக்கொண் டாயிந்த நானிலத்தே.”

[வான்-மேகம். வெண்ணரன் பாஷை-வெள்ளைக்காரர் பாஷையாகிய ஆங்கிலம்.]

வேதநாயகம் பிள்ளை அவ்வப்போது பாடிய பாடல்கள் பல யாரேனும் மடத்திற்கு வந்தால் அவர்கள், “முன்சீப் வேதநாயகம் பிள்ளையவர்கள் ஸந்நிதானத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார்களாமே?” என்று கேட்பார்கள். உடனே தேசிகர் அப்பாடல்களைச் சொல்லும்படி எனக்கு உத்தரவிடுவார். நான் இசையுடன் சொல்லி அர்த்தமும் உரைப்பேன்.

தாது வருஷப் பஞ்சம்

தாது வருஷத்தில் தமிழ் நாடெங்கும் கடுமையான பஞ்சம் உண்டாயிற்று. அப்போது அயலூரிலிருந்து உணவுக்கு வழியின்றி வந்தவர்களுக்கு வேலை கொடுப்பதற்காகச் சுப்பிரமணிய தேசிகர் பல புன்செய் நிலங்களை நன்செய்களாக்கினர். பல இடங்களில் கஞ்சித் தொட்டிகளை வைத்து ஜனங்களுக்குக் கஞ்சி வார்க்கச் செய்தார்.

அக்காலத்தில் தேசிகரைப் பாராட்டி வேதநாயகம் பிள்ளை பல பாடல்கள் பாடினர். அவற்றுள் ஒன்று வருமாறு:-

“எரியொத்த பஞ்ச மிடங்கரை யொத்த திடங்கர்பற்றும்
கரியொத் தனபல் லுயிர்களப் பஞ்சக் கராமடிக்க
அரியொத் தனன்சுப் பிரமணி யைய னரிசக்கரம்
சரியொத் தனவவ னீந்திடும் பொன்வெள்ளிச் சக்கரமே.”

[இடங்கர் - முதலை. கரா - முதலை. அரி - திருமால். பொன் சக்கரம் - பவுன். வெள்ளிச் சக்கரம் - ரூபாய்.]

சில சமயங்களில் அவர் சில பாடல்களைப் பாடி எனக்கு அனுப்பி, “இவற்றைச் சந்நிதானத்திடம் படித்துக் காட்டவேண்டும்” என்று கடிதமும் எழுதுவார். அக்கடிதம் செய்யுளாகவே இருப்பதும் உண்டு அவர் விருப்பப்படியே நான் செய்வேன்.