பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாடல்கள்

433

இப்படி இறைவன் திருவருளால் எங்கள் குடும்பத்தில் எல்லோருடைய உள்ளத்திலும் ஒரு நிறைவு உண்டாகி எங்கள் வாழ்க்கையை இன்பமுள்ளதாக்கியது.

அத்தியாயம்—71

சிறப்புப் பாடல்கள்

ருமபுர ஆதீனத்து அடியவருள் ஒருவரும் சிறந்த தமிழ் வித்துவானும் காசியில் சில வருஷங்கள் வசித்தவருமான ஸ்ரீ பரம சிவத் தம்பிரான் என்பவர் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் மிக்க பக்தியுடையவராகித் தருமபுர ஆதீனகர்த்தருடைய அனுமதி பெற்றுப் பெரும்பாலும் திருவாவடுதுறையிலேயே இருந்து வந்தனர். அவரிடத்தில் சுப்பிரமணிய தேசிகருக்கு விசேஷமான அன்பு உண்டு. அவர் திருவாவடுதுறையில் இருந்த பொழுது சிறந்த நூல்களைப் படித்து ஆராய்ந்தும், மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொண்டும் வந்தார்.

அவர் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் சில தமிழ் நூல்களையும், சைவ சாஸ்திரங்களையும், மடத்தைச் சார்ந்த வடமொழி வித்துவான்களிடத்தில் வியாகரண நூலையும் படித்து வந்தார். அவர் நன்றாகப் பிரசங்கம் செய்வார். தமிழிற் செய்யுள் இயற்றும் ஆற்றல் அவர்பால் அமைந்திருந்தது. நுட்பமான அறிவுடையவர். மனத்தைக் கவரும் தோற்றமுடையவர். அவரிடம் நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் நன்னூல் விருத்தியுரை முழுவதையும் ஒரு முறை பாடம் கேட்டோம் ஸம்ஸ்கிருத வியாகரணம் படித்தவராதலின் சில நுட்பமான விஷயங்களை விளக்கிச் சொன்னார். எவ்வளவு கற்றாலும் பூரணமாக அறிந்து கொண்டதாக யாரும் சொல்லிக் கொள்ள முடியாதென்பதை அவரிடம் பாடம் கேட்டபோது நாங்கள் தெரிந்து கொண்டோம்.

மும்மணிக் கோவை

சுப்பிரமணிய தேசிகரிடத்தில் ஈடுபட்ட பரமசிவத் தம்பிரான் அவர் மீது ஒரு மும்மணிக் கோவை இயற்றினார். தேசிகருடைய முன்னிலையில் அப்பிரபந்தம் அரங்கேற்றப்பெற்றது. அது காப்புச் செய்யுளுடன் 31- பாடல்களை உடையது. அம்மும்மணிக் கோவைக்குப் பத்துப் பேர்கள் அளித்த சிறப்புப் பாயிரச் செய்யுட்-

என்-28