பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

436

என் சரித்திரம்

மாகவும் அழகாகவும் போடப்பட்டிருக்கும். அதைக் கோவிற் பட்டியிலிருப்பது போலவே மரக் கொட்டகையாகப் போடவேண்டுமென்று ஜவந்திபுரத்திலிருந்த பெரிய காறுபாறு வேணுவன லிங்கத் தம்பிரான் நினைத்து அதற்கு ஆக வேண்டிய முயற்சி செய்தார். அதையறிந்த சேற்றூர் ஜமீன்தாரும், சிவகிரி ஜமீன்தாரும் அதற்கு வேண்டிய தேக்க மரங்களையெல்லாம் அனுப்பினார். திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து பல தச்சர்கள் வருவிக்கப்பெற்றனர். அவர்களுக்கெல்லாம் தலைவராக ’புதியவன் ஆசாரியார்’ என்பவர் இருந்து மிக்க கருத்தோடு எல்லாவற்றையும் நடத்தி வந்தார். ஒரு வருஷம் அவ்வேலை நடைபெற்றது. தூண்கள் நாட்டாமல் ஒரே கவிப்பாக அம்மண்டபம் அமைந்தது. அம்மண்டபத்தைக் கட்டி முடிக்க வேண்டுமென்று ஊக்கத்தோடு முயன்றவர் வேணுவன லிங்கத் தம்பிரானாகையால் அதற்கு, ‘வேணுவன லிங்க விலாசம்’ என்னும் பெயர் வைக்கப்பட்டது.

ஈசுவர வருஷம் தை மாதம் முதல் தேதி அதன் பிரவேச விழா நடைபெற்றது. அயலூர்களிலிருந்து பல கனவான்களும் வித்துவான்களும் அவ்விசேஷத்திற்கு வந்திருந்தனர். அத்தகைய மண்டபம் சோழ தேசத்தில் இல்லாமையால் பலர் அதனைப் பார்க்கும் பொருட்டே வந்தனர். மண்டபத்தின் மேல் தட்டின் உட்பாகத்தில் நாயன்மார்கள் வரலாறுகளையும், திருவிளையாடற் கதைகளையும் புலப்படுத்தும் சித்திரங்கள் எழுதப்பெற்றன.

விசேஷம் நடந்த தினத்தன்று மத்தியானத்தில் பிராமண போஜனமும் மகேசுவர பூஜை முதலியனவும், இரவில் பட்டணப் பிரவேசமும் நிகழ்ந்தன. தம்பிரான்களும் பிறரும் அம்மண்டபத்தைப் பாராட்டிச் செய்யுட்கள் இயற்றினர். பட்டணப் பிரவேசம் ஆனபிறகு சுப்பிரமணிய தேசிகர் ஒடுக்கத்திற்கு வந்து அமர்ந்தார். அப்போது அவர் விருப்பத்தின்படி வேணுவன லிங்க விலாசச் சிறப்புப் பாடல்களை நான் படித்துக் காட்டினேன். தம்பிரான்கள் முதலியோர் அங்கே கூடியிருந்தார்கள். அக்காலத்தில் திருப்பனந்தாட் காசிமடத்தில் தலைவராக இருந்த ஸ்ரீ ராமலிங்கத் தம்பிரானென்பவரும் அங்கே வந்து உடனிருந்தார்.

பாராட்டுப் பாடல்கள்

தம்பிரான்களும் பிறரும் தனித் தனியே பாடல்கள் இயற்றியிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் யாருக்கும் தோற்றாத நயம் அமையப் பாட வேண்டுமென்று முயன்று பாடினார்கள். ஒவ்வொருவரும் தாம்தாம் இயற்றிய பாடல்களை மற்றவர்களுக்குக்