பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அத்தியாயம்—74

நான் பதிப்பித்த முதல் புஸ்தகம்

திருநெல்வேலியில் மேலை ரத வீதியில் திருவாவடுதுறைக்குரிய மடம் ஒன்று உண்டு. அதனை ஈசான மடம் என்று சொல்லுவர். நானும் மகா வைத்தியநாதையர் முதலியோரும் மதுரையிலிருந்து போன சமயம் அவ்விடத்தில் மடபதியாகச் சாமிநாத தம்பிரானென்பவர் இருந்து எல்லாவற்வையும் கவனித்து வந்தார். நாங்கள் அவருடைய ஆதரவில் அங்கே தங்கியிருந்து சுப்பிரமணிய தேசிகரது வரவை எதிர்பார்த்திருந்தோம்.

வாதம்

தேசிகர் பல சிவ ஸ்தலங்களைத் தரிசித்த பிறகு திருநெல்வேலி வந்து சேர்ந்தார். பாண்டி நாட்டிலுள்ள பிரபுக்கள் பலரும் வித்துவான்கள் பலரும் காணிக்கையுடன் வந்து தேசிகருரைக் கண்டு இன்புற்றனர். வித்துவான்கள் தேசிகர்மீது தாமியற்றிய புதிய பாடல்களைக் கூறி ஸல்லாபம் செய்து சென்றனர். சேற்றூரிலிருந்து இராமசாமி கவிராயர் முதலியவர்களும், இராஜவல்லிபுரம் அழகிய சொக்கநாதபிள்ளை என்பவரும், ஆழ்வார் திருநகரியிலிருந்து தேவராஜ பாரதி என்பவரும் வந்தனர். தேவராஜ பாரதி சில செய்யுட்களைச் சொன்னார். அவற்றிலுள்ள சில விஷயங்களை நான் ஆக்ஷேபம் செய்து கேள்விகள் கேட்டேன். அவர் அவற்றிற்குத் தக்க சமாதானம் சொன்னார். அதுகாறும் வேறு வித்துவான்களிடம் அவ்வளவு தைரியமாக ஆக்ஷேபம் செய்யாத எனது செயலைக் கண்ட தேசிகர் பிறகு தனியே என்னிடம், “நீர் செய்த ஆக்ஷேபம் உசிதமானதாக இருந்தது. விஷயங்களைத் தடைவிடைகளால் நிர்ணயம் செய்வது ஒரு சம்பிரதாயம். புலவர்களில் வாதியென்று ஒருவகையுண்டு. விதண்டாவாதம் செய்யாமல் நியாயத்தை அனுசரித்துத் தர்க்கஞ்செய்தால் கேட்பதற்கு ரஸமாக இருப்பதோடு இரு சாராருடைய அறிவின் திறமும் வெளிப்படும். ஸம்ஸ்கிருதத்தில் இந்த வழக்கம் மிகுதியாக உண்டு” என்று சொன்னார். ‘நாம் அவர் கூறியதை மறுத்துப் பேசியது ஒருகால் தவறாக இருக்குமோ’ என்று நான் கொண்டிருந்த சந்தேகம் அவர் கூறிய வார்த்தைகளால் நீங்கியது.

கல்லிடைக்குறிச்சி

பிறகு சின்னப் பண்டாரஸந்நிதியாகிய நமசிவாய தேசிகருடைய வேண்டு கோளின்படி சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன்