பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அத்தியாயம்—81

பிரியா விடை

கும்பகோணம் காலேஜில் வேலை பார்க்கும்படி என்னை அனுப்புவதற்குச் சுப்பிரமணிய தேசிகர் சம்மதித்தனரென்ற செய்தி மிக விரைவில் எங்கும் பரவியது. மடத்தின் தொடர்புடையவர்களெல்லோரும் இது கேட்டு வருந்தினார்கள். தியாகராச செட்டியார் பகற்போசனத்திற்குக் கூட இராமல், “வீட்டில் ஒரு திதி நடக்க வேண்டும்” என்று சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்லி விரைவில் விடைபெற்றுக் கும்பகோணம் போய்விட்டார்.

நான் வீட்டுக்குச் சென்று என் தாய் தந்தையரிடம் விஷயத்தைச் சொன்னபோது அவர்கள் சந்தோஷமென்றும் துக்கமென்றும் தெரியாத ஒரு நிலையில் இருந்தார்கள், எனக்கோ ஒரே மயக்கமாக இருந்தது. பழகிய இடத்தின்பாலுள்ள பற்றும் புதிய இடத்தின் கௌரவமும் ஒன்றனோடு ஒன்று போராடி என்மனத்தை அலைத்தன.

தேசிகர் கருத்து

சுப்பிரமணிய தேசிகர் தீபாரதனை செய்து விட்டுப் பெரிய பூஜையிலிருந்து அடியார்களுக்கு விபூதி கொடுப்பதற்கு ஒடுக்கம் செல்வது வழக்கம். தம்பிரான்கள் பலரும் அடியார்கள் பலரும் பின் தொடர்ந்து செல்வார்கள். அப்போது சின்னப்பண்டார ஸந்நிதிகள் சுப்பிரமணிய தேசிகருக்குக் கை கொடுத்து அழைத்து வருவார்.

அன்றைத் தினம் பூஜை நடந்த பிறகு தேசிகர் ஒடுக்கத்துக்கு வந்தனர். என்னைக் கும்பகோணத்திற்கு அனுப்பும் விஷயத்தைப் பற்றியே அவர் மனமும் சிந்தித்திருக்க வேண்டும். அப்போது அவர் சின்னப் பண்டார சந்நிதியைப் பார்த்து, “சின்னப் பண்டாரம், சாமிநாதையரைத் தியாகராச செட்டியார் வேலைக்குப் போகும்படி சிபார்சு செய்து விட்டோம். செட்டியார் நேற்று வந்து சென்றது அவரை அழைத்துப் போவதற்காகத்தான். நாமும் சம்மதித்து யோக்கியதா பத்திரிகையும் சிபார்சுக் கடிதமும் எழுதிக் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

நமசிவாய தேசிகர் வியப்புற்று, “அப்படிச் செய்யலாமா? இடத்தின் வழக்கங்களெல்லாம் அவர் நன்றாகத் தெரிந்தவர். வருகிற வித்துவான்களுக்கும் பிரபுக்களுக்கும் பிரியமாக நடந்துகொள்பவர். மாணக்கர்களுக்கு நன்றாகப் பாடம் சொல்லிவருகிறார். அவர்