பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவலையற்ற வாழ்க்கை

255

அடிக்கடி கடிதங்கள் எழுதினார். நானும் அவ்வப்போது பதில் எழுதினேன்.

செய்யுட் பழக்கம்

முதலில் நான் செட்டியாருக்கு வசன நடையிலேயே கடிதங்கள் எழுதினேன். ஒரு பதிற் கடிதத்தில் அவர், “இப்படி எழுதினால் உங்களுக்குச் செய்யுள் செய்யும் பழக்கம் நின்றுவிடும். ஐயா அவர்கள் எழுதும் வழக்கப்படியே முதலில் ஒரு செய்யுளெழுதி அப்பாற் செய்திகளைத் தெரிவிக்கவேண்டுமென்பது என் கருத்தன்று. உங்களுக்குச் செய்யுட் பழக்கம் விடாமலிருக்க வேண்டு மென்பதே என் எண்ணம்” என்று குறிப்பித்திருந்தார். அப்பால் நான் அவ்வாறு செய்யுட்களெழுதி வரலானேன். சில சமயங்களில் கடிதம் முழுவதையும் செய்யுளாகவே எழுதியதுண்டு. அவரும் தம் கடிதங்களின் தலைப்பில் என்னைப் பாராட்டிச் செய்யுட்களை எழுதுவார். என் செய்யுட்களையும் பாராட்டுவார்.

செட்டியார் வற்புறுத்தியதுமுதல், தோத்திரங்களும் சமயோசிதப் பாடல்களும் செய்து வந்தேன். ஸ்ரீ கும்பேசுவரர் விஷயமாகத் தனித் தோத்திரங்களும் ஸ்ரீ நாகேசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள பெரியநாயகி விஷயமாக ஓர் இரட்டை மணிமாலையும் ஸ்வாமிமலை முருகக் கடவுள் மீது பல செய்யுட்களும் இயற்றினேன்.

ஆடிக் காற்றும் வெள்ளமும் மிகுந்து அவ்வருஷம் மரங்களெல்லாம் மிக்க சேதமடைந்தன. அந்த விஷயத்தை வைத்துச் சில செய்யுட்கள் இயற்றி நண்பர்களுக்குப் படித்துக் காட்டினேன் அவற்றுள் இரண்டு செய்யுட்கள் வருமாறு:

“கழுத்துயர முறுமுடலொட் டகமாதி பன்மிருகம்
     கவலப் பல்வீக்
குழுத்துயரக் கமுகுபனை தெங்காதி மரங்கள்குலை
     குலைய வேரோ
டிழுத்துயர வெறிந்துயிர்கள் விழுத்துயர மருவமருத்
     தியற்றும் நோயாம்
முழுத்துயர மாயவிதைக் காற்றுயர மெனவெவரும்
     மொழிவா ரென்னே”

[கழுத்து உயரம் உறும் - உடலையுடைய ஒட்டகம். கவல-கவலையை அடைய, பல்வீ குழு துயர-பல பறவைக் கூட்டங்கள் துயரத்தை அடைய. வேரோடு இழுத்து-உயர எறிந்து. விழுத்