பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்ன பிரயோசனம்‌

533

விடைபெறும் போது அவர் கூறிய வார்த்தைகளையும் எண்ணி, அவர் சாமான்ய மனிதரல்லரென்றும், ஆழ்ந்த அறிவும் யோசனையும் உடையவரென்றும் உணர்ந்தேன்.

இரண்டாவது சந்திப்பு

அடுத்த ஞாயிற்றுக்கிழமை இராமசாமி முதலியாரிடம் போனேன். அன்று அவர் மிகவும் அன்போடு என்னை வரவேற்றார். அவரைப் பார்ப்பதைவிட அவர் சொன்ன புஸ்தகத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் கட்டுக்கடங்காமல் இருந்தது. அவர் தம்மிடம் இருந்த சீவகசிந்தாமணிக் கடிதப் பிரதியை என்னிடம் கொடுத்தார். “இதைப் படித்துப் பாருங்கள். பிறகு பாடம் ஆரம்பிக்கலாமா?” என்றார். “அப்படியே செய்யலாம்” என்று உடன்பட்டேன். பிறகு அவர் அந்தப் பிரதியைத் தாம் பெற்ற வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.

முதலியார் சிந்தாமணி பெற்ற வரலாறு

“எனக்குச் சிந்தாமணி முதலிய பழைய புஸ்தகங்களைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது. இந்தத் தேசத்தில் நான் சந்தித்த வித்துவான்களில் ஒருவராவது அவற்றைப் படித்ததாகவே தெரியவில்லை. ஏட்டுச் சுவடிகளும் கிடைக்கவில்லை. திருநெல்வேலிப் பக்கத்திலுள்ள கவிராயர்கள் வீட்டில் பிரதிகள் கிடைக்கலாமென்று எண்ணி ஸ்ரீவைகுண்டத்தில் முன்ஸீபாக இருந்த என் நண்பர் ஏ. இராமசந்திரையர் என்பவரிடம் விஷயத்தைச் சொல்லி வைத்திருந்தேன். அவர் யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்; ஒன்றும் கிடைக்கவில்லை.

“ஒரு சமயம் ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகிலுள்ள ஓர் ஊரில் பரம்பரை வித்துவான்களாக இருந்த கவிராயர் குடும்பமொன்றில் உதித்த ஒருவர் ஒரு வழக்கில் சாக்ஷியாக வந்தார். அவரை விசாரிக்கும்போது, அவர் கவிராயர் பரம்பரையைச் சேர்ந்தவரென்றும், அவருடைய முன்னோர்கள் பல நூல்களை இயற்றியிருக்கிறார்களென்றும் என் நண்பருக்குத் தெரியவந்தது. விசாரணை யெல்லாம் முடிந்த பிறகு முன்ஸீப் அந்தச் சாட்சியைத் தனியே அழைத்து அவர் வீட்டில் ஏட்டுச் சுவடிகள் இருக்கின்றனவா என்று விசாரித்தார். அவர், ‘இருக்கின்றன’ என்று சொல்லவே, சிந்தாமணிப் பிரதி இருந்தால் தேடி எடுத்துத் தரவேண்டுமென்று கூறினார். அதிகாரப் பதவியிலிருந்தமையால் அவர் முயற்சி பலித்தது. அந்தக் கவிராயர் சீவகசிந்தாமணிப் பிரதியைக்