பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

என் சரித்திரம்

கிறது. நான் ராஜயோகத்தை அனுபவித்தேன், இனியும் அப்படியே அனுபவிப்பதென்பது இயலாத காரியம். அவரவர்கள் கொடுத்து வைத்ததுதான் அவரவர்களுக்குக் கிடைக்கும். அந்த அளவுக்குமேல் ஒன்றும் கிடைக்காது” என்று சொல்லிச் சிறிது மௌனமாக இருந்தார். பிறகு “அப்பா, வேங்கடசுப்பு ஏட்டை எடு; ஒரு கீர்த்தனம் சொல்லுகிறேன்; எழுதிக்கொள்” என்று கூறிவிட்டு,

“கொடுத்துவைத் ததுவரும் ஏறாசை யால்மிகக்
குறைப்பட்டால் வருகுமோ பேய்மனதே”

என்ற பல்லவியை முதலாக உடையதும் பைரவி ராகத்தில் அமைந்ததுமாகிய கீர்த்தனத்தைச் சொல்லத் தொடங்கினார். எல்லாவிதமான பலமும் போன அந்த நிலையில் அந்த வித்துவானுக்கு இறைவனது தியானந்தான் பயனுடைய தென்ற உணர்வு மேலெழுந்து நின்றது.

“படுத்தால் பின்னாலே கூட வருவாருண்டோ
பயறணீ சரைநிதம் பக்தியாய்த் தொழுதிரு”

என்ற அநுபல்லவியைப் பாடினார். அவர் மனம் உடையார்பாளையம் ஆலயத்திலுள்ள சிவபெருமானாகிய பயறணீசரிடம் சென்றது. மேலே மூன்று சரணங்களையும் பாடி முடித்தார். என் தந்தையார் அக்கீர்த்தனத்தை எழுதினார். அந்த நிலையிலும் அப்பெரியாருடைய சாகித்திய சக்தி முன் நிற்பதை நினைந்தபோது வியப்பும், “இத்தகைய பெரியோரை இழந்து விடுவோமோ” என்று எண்ணியபோது துக்கமும் உண்டாயின. கண்ணில் நீர் வழிய அதை எழுதினார். அதன் பின்பும் கனம் கிருஷ்ணையர் தாம் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பந்துவராளி ராகத்தில் சிதம்பரம் ஆனந்த நடராஜமூர்த்தி விஷயமாக,

“தில்லையப் பாவுனது பஞ்சா க்ஷரப்படியிற்
சின்மயமாய்த் தினந்தினமும் வந்துதரி சிப்பேன்”

எனத் தொடங்கும் ஒரு கீர்த்தனத்தைச் சொல்லி எழுதச்செய்தார்.

கனம் கிருஷ்ணையரிடத்தில் இயல்பாகவே பக்தியுடைய என் தந்தையாருக்கு அவரது இறுதிக்கால நிகழ்ச்சிகள் அதனைப் பன்மடங்கு அதிகமாக்கின. கனம் கிருஷ்ணையருடைய உள்ளத்துள்ளே புதைந்திருந்த பக்தி அப்போது வெளிப்பட்டது. அந்தப் பக்தியின் மலர்ச்சியை அதுகாறும் அவ்வளவு விளக்கமாக எந்தை-