பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

546

என் சரித்திரம்

இவ்வாறு தமிழில் அன்புடைய அவர் பிரிவதில் எனக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று. அவருக்கும் நெடுங்காலம் பழகிய கும்பகோணம் காலேஜை விட்டுப் போகிறோமே என்ற வருத்தம் ஓரளவு இருந்தது. அவர் சென்னைக்குச் செல்லும் செய்தி கேட்டுக் கும்பகோண நகர வாசிகள் துன்புற்றனர்.

அவருக்கு ஒரு பிரிவுபசாரம் நடத்தவேண்டுமென்று ஆசிரியர்களும் அவருடைய அன்பர்களும் தீர்மானித்தார்கள். 1882-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பிரிவுபசாரம் நடை பெற்றது. அதில் கோபால ராவ் விஷயமாகப் பத்துச் செய்யுட்கள் இயற்றி நான் படித்தேன். படிக்கும் போது வருத்தம் தாங்காமல் கண்ணீர் விட்டேன்.

அப்பாடல்களிற் சில வருமாறு:-

“மாறாத வாய்மை தனில் மனச்சான்றுக் கொத்தியலும்
   மாண்பு தன்னில்
தேறாத மாணவகர்க் கினிதுவிளங் குறத்தெருட்டும்
   திண்மை தன்னில்
சீறாத இயல்புடைய கோபால ராயவண்ணற்
   சிவணு வோர்யார்
பேறாய அவன்பெருமை மிகச்சிறியன் நாவொன்றாற்
   பேசற் பாற்றோ?”

[மனச்சான்று - மனச்சாட்சி. தெருட்டும் விளக்கும். சிவணுவோர் - ஒப்பாவார்]

“மன்னியநற் பொருட்கல்வி கற்றலரி ததினரிது
     மாற ஐயம்
அன்னியர்பால் வினவாமை அதினரிது மாணாக்கர்க்
     கையந் தீர்த்தல்
பன்னியவா றேநடத்த லதினரிய திவைஇயல்பாப்
     படைத்தோன் அன்பு
துன்னியவன் னையைநிகர்த்த கோபால ராயப்பேர்த்
தூய னம்மான்”

[ஐயம் மாறவென்று கூட்டுக. இவை இயல்பாய் படைத்தோன் - இந்தக் குணங்களை இயல்பாகவே கொண்டவன்]

“முன்னாடுந் திறமை தனில் மிகவல்ல துரைத்தனத்து
     முதல்வர் தொண்டை
நன்னாடு சான்றோரை யுடைத்தென்றல் தனைப்புதுக்க
     நாடிக் கொல்லோ