பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

558

என் சரித்திரம்

முள்ள பிரதி கிடைத்தால் பார்த்துப் பயன் பெறலாமேயென்ற கருத்தோடு பலரிடம் விசாரித்தேன்; பலருக்குக் கடிதம் எழுதினேன். தஞ்சாவூரில் பெரிய செல்வராக இருந்த விருஷபதாச முதலியாரென்பவர் வீட்டிற் பல பழைய ஏட்டுச் சுவடிகள் உள்ளனவென்று தெரிய வந்தது. சுவடிகள் தேடும் யாத்திரையை அப்பொழுது தொடங்கினேன்; இன்னும் ஓயவில்லை. தஞ்சாவூருக்குச் சென்று எனக்குத் தெரிந்த கனவான்களை உடனழைத்துக் கொண்டு முதலியார் வீட்டிற்குச் சென்றேன். அவர் ஜைனர். ஜைனமதக் கிரந்தங்கள் பல அவரிடம் இருந்தன. சீவக சிந்தாமணிப் பிரதியையும் வைத்துப் பூஜித்து வந்தார். நான் போய்க் கேட்டபோது முதலில் அதைப் பூஜையிலிருந்து எடுக்கக்கூடாதென்று சொல்லிவிட்டார். நான் மிகவும் பணிவாக வேண்டிக் கொண்டேன். “ஜைனர்களுக்குத்தான் கொடுப்பேனேயன்றி மற்றவர்களுக்குத் தரமாட்டேன்; அப்படித் தருவது எங்கள் சம்பிரதாயத்துக்கு விரோதம்; எவ்வளவோ ரகஸ்யங்கள் பொருந்திய சிந்தாமணியை வெகு சுலபமாக நீங்கள் படித்துப் பார்க்க முடியாது. ஆசாரியர்கள் மூலமாக உபதேசம் பெற்று விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அன்னிய மதத்தினராகிய உங்களுக்குக் கொடுப்பதனால் எங்களுக்கு பாவம் சம்பவிக்கும்” என்றார்.

அவருக்கு என்ன என்னவோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன். தமிழுலக முழுவதும் படித்து இன்புறும் விஷயங்கள் சிந்தாமணியில் இருக்க, “ஒரு மதத்திற்கே உரியது, மற்றவர்கள் கண்ணிற் படக்கூடாது” என்று எண்ணி மூடி வைத்திருக்கும் இயல்பை உணர்ந்து நான் வருந்தினேன். “இப்படிச் சமய வேறு பாட்டால் மறைத்தமையால் உலகத்துக்கு வெளிப்படாத நூல்கள் எத்தனை இறந்து போயினவோ! தமிழுக்குப் பெருமை உண்டாக்கப் பெரியவர்கள் நூல்கள் இயற்றி வைத்திருக்க, அவற்றை மறைத்துத் தமக்கும் தம்மைச் சார்ந்தவருக்கும் சிறுமை உண்டாக்கிக் கொள்ளும் இயல்பினர் மனம் திருந்தும் காலம் வருமா?” என்று ஏங்கினேன்.

என்னுடன் வந்திருந்த ஒருவர் விருஷபதாச முதலியாரிடம், நான் கும்பகோணம் காலேஜில் வேலை பார்ப்பவனென்றும், திருவாவடுதுறை மடத்திற்கு மிகவும் வேண்டியவனென்றும் சொன்னார். என் நிலைமை தெரிந்து கொண்ட பிறகாவது முதலியார் சுவடியைக் கொடுக்கக் கூடுமென்பது சொன்னவரது அபிப்பிராயம். ஆனால் அது நேர் விரோதமாக முடிந்தது. “அப்படியா! சைவ மடத்திற் பழகினவருக்கு ஜைன கிரந்தங்களில் அன்பு ஏற்படுவதற்கு நியாயமே இல்லை. சைவர் ஜைனர்களைத் துச்சமாக எண்ணுபவர்கள். நான் கொடுக்கவே மாட்டேன்” என்று