பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/617

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

590

என் சரித்திரம்

கையொப்பம் செய்தார். அவருக்குத் தமிழ் தெரியாவிட்டாலும் நல்ல காரியத்திற்குத் தம்மால் இயன்ற உபகாரத்தைச் செய்ய வேண்டுமென்பதே அவர் கருத்து. அவரிடம் நான் அச்சிட்ட பாரங்களைக் காட்டினேன். பதிப்பு முறை அழகாக உள்ளதென்று கூறி. “சீக்கிரத்தில் இதை முடித்து விடுங்கள்” என்று ஆதரவோடு சொன்னார்.

தேசிகர் வார்த்தைகள்

அந்த வாரம் சனிக்கிழமை திருவாவடுதுறை சென்று சுப்பிரமணிய தேசிகரைக் கண்டேன். அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாயிற்றோ அதை அளவிட்டுச் சொல்ல முடியாது நான் கையில் கொண்டு சென்ற பாரங்களை வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தார். அதன் அமைப்பு முறையை நான் எடுத்துச் சொன்னேன். அப்போது அருகில் இருந்த சிலரைப் பார்த்துத் தேசிகர், “சாமிநாதையர் மடத்திலேயே இருந்தால் இந்த மாதிரியான சிறந்த காரியங்களைச் செய்ய இடமுண்டா? நல்ல வஸ்துக்கள் தக்க இடத்தில் இருந்தால் நன்றாகப் பிரகாசிக்கும்” என்றார். நான் இடைமறித்து, “இது மட்டும் தக்க இடமன்றா? பிள்ளையவர்களும் அவர்களுக்கு முன் சிவஞான முனிவர் முதலியவர்களும் இந்த ஆதீனத்தில் இருந்து தானே மிக்க புகழைப் பெற்றனர்?” என்று விநயமாகச் சொன்னேன்.

“அது வேறு விஷயம்; இந்த ஆதீன சம்பந்தம் உங்களுக்கு விட்டுப் போகவில்லையே! அதோடு வேறு ஒரு சிறப்பும் உண்டாயிற்று. இப்போது சென்னைக்குப் போய் உங்கள் காரியத்தைத் திருத்தமாகச் செய்யத் தொடங்கி விட்டீர்கள்” என்று அவர் சொன்னார்.

கும்பகோணத்திற்கு அடிக்கடி ‘புரூப்’ கள் சென்னையிலிருந்து வரும். நான் காலேஜ் விட்டவுடன் வீட்டில் உட்கார்ந்து படித்துத் திருத்தம் செய்வேன். கும்பகோணத்திற்கு மெயில் வண்டி பாதிராத்திரி நேரத்தில் வரும். அதற்குள் திருத்திப் புரூபைக் கட்டி, நானே ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று தபாலிற் போட்டு வருவேன்.

சகாயம் செய்தோர்

பக்தபுரி அக்கிரகாரத்தில் இருந்த என்னுடைய வீடு மிகவும் சிறியதானமையால் பிரதிகளை வைத்துக்கொண்டு பலருடன் ஒப்பிடுவதற்கு விசாலமான ஓர் இடத்தைத் திட்டம் செய்தேன். என் வீட்டிலிருந்து இரண்டு வீட்டுக்கு அப்பால் இருந்த மாடி அது. மாதம் இரண்டரை ரூபாய் வாடகை. அங்கே இருந்து பிரதிகளைப்