பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பலவகைக் கவலைகள்

591

பார்த்து ஒப்பிடுவதும், புரூப் பார்ப்பதுமாகிய காரியங்களைச் செய்து வந்தேன். காலேஜ் பிள்ளைகளும் வேறு சிலரும் வந்து உதவி புரிந்தனர். இப்போது பங்களூரில் இருக்கும் ஸ்ரீமான் திவான் பகதூர் ராஜஸபாபூஷண கே. ஆர். ஸ்ரீநிவாசையங்கார் (நிர்வாக சபையின் முதல் அங்கத்தினராக விளங்கியவர்) அக்காலத்தில் காலேஜில் படித்து வந்தார். அவர் மிக்க அன்போடு வந்து சிந்தாமணி புரூபைத் திருத்தும்பொழுது துணை செய்வார். மிகவும் நன்றாகப் படிப்பார். இப்படி என்பால் அன்பு பூண்டு உதவிய காலேஜ் மாணாக்கர் பலர். எனக்குச் சகாயம் செய்வதற்கு மடத்திற் படிக்கும் மாணாக்கர்களிற் சிலரை அனுப்ப வேண்டுமென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரை வேண்டினேன். அவர் [1]வேம்பத்தூர்ச் சுந்தரேச பாரதியையும் [2]நல்ல குற்றாலம் பிள்ளையென்பவரையும் அனுப்பினார். அவர்கள் ஏடு பார்த்து ஒப்பு நோக்குதல் முதலிய உதவிகளைச் செய்து வந்தார்கள். கும்பகோணத்திற்கு அருகிலுள்ள கொட்டையூரிலிருந்து ஸ்ரீநிவாசையங்கார் என்பவரும் என்னிடம் பாடங் கேட்டு வந்ததுடன் பதிப்பிற்கு வேண்டிய உதவியையும் செய்தார்.

கோப்பாய் சபாபதி பிள்ளை

ஒரு சமயம் வழக்கம்போல் நான் திருவாவடுதுறை சென்று சிந்தாமணி புரூபையும் அடித்த பாரங்களையும் சுப்பிரமணிய தேசிகரிடம் காட்டினேன். அப்போது கோப்பாயென்னும் ஊரினராகிய [3]சபாபதிபிள்ளையென்பவர் அங்கே வந்திருந்தார். அவர் தமிழ்நூல்களில் நல்ல பயிற்சியுள்ளவர் நான் சிந்தாமணி புரூப்களைக் காட்டும்போது அவரும் கவனித்தார். எனக்கு அவர் பழக்கம் முன்பே உண்டு பிறகு அவர், “நானும் இந்தப் புஸ்தகத்தின் புரூபைப் பார்த்துத் திருத்தித் தருகிறேன். அனுமதி செய்ய வேண்டும்” என்றார். அப்போது நான் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்து விட்டேன். பிறகு தனியே இருக்கும்போது சுப்பிரமணிய தேசிகர் என்னை நோக்கி, “கண்டபேரிடம் இதைக் கொடுக்கக் கூடாது. நீங்கள் மிகவும் சிரமப்பட்டுச் செய்த திருத்தங்களையெல்லாம் தாமே செய்தனவாகச் சொல்லிக்கொள்வதற்கு இடமேற்படும். சபாபதிபிள்ளை விருப்பத்திற்கு இணங்க வேண்டாம்” என்று சொன்னார். நான் அவர் கருத்தின்படியே இருந்தேன்.


  1. இவர் வேம்பத்தூர் ஆசு கவி சிலேடைப்புலி பிச்சுவையரின் இளைய சகோதரர். இவர் காலமடைந்து சில வருஷங்களாயின.
  2. இவர் ஆதி குமரகுருபர சுவாமிகள் மரபினர் சபாபதி நாவலரென்றும் வழங்கப் பெறுவர்.
  3. சபாபதி நாவலரென்றும் வழங்கப் பெறுவர்.