பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/629

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

602

என் சரித்திரம்

யருக் கும் கும்பகோணம் பக்தபுரி அக்கிரகாரத்தில் வக்கீலாக இருந்த என்.வேங்கடராமையருடைய குமாரியும், ராவ்பகதூர் கே. வி. கிருஷ்ணசாமி ஐயருடைய தமக்கையுமான ஸ்ரீ மங்களாம்பிகைக்கும் கல்யாணம் நடைபெற்றது. எனக்குப் பழக்கமுள்ள ஜைன நண்பர்கள், “சிந்தாமணியை ‘மண நூல்’ என்று சொல்லுவது வழக்கம். அதனை நீங்கள் பதிப்பித்து வருகிறீர்கள். அதனுடைய பயனாக உங்கள் குடும்பத்தில் ஒரு திருமணம் நிகழ்ந்தது” என்று சொல்லித் தம் திருப்தியை வெளியிட்டனர்.


அத்தியாயம்—99

மகிழ்ச்சியும் வருத்தமும்

சீவகசிந்தாமணி அச்சில் இருந்தாலும் வேறு ஏட்டுச்சுவடிகள் கிடைத்தால் ஒப்பிட்டுப் பார்க்கலாமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய உதவியால் எனக்குக் கிடைத்த ஏடுகளுள் திருநெல்வேலிப் பக்கத்துப் பிரதிகள் திருத்தமாக இருந்தன. அவர் திருநெல்வேலியில் யாத்திரை செய்த காலத்தில் அங்கங்கே உள்ள பரம்பரைத் தமிழ்ப் புலவர்கள் பலர் அவரைத் தரிசிக்க வந்ததை நான் கவனித்திருக்கிறேன். அவர்களுடைய பழக்கமும் எனக்கு உண்டாயிற்று. அவர்களிடம் நூற்றுக்கணக்கான தமிழ் நூற்சுவடிகள் உள்ளனவென்றும் அவர்கள் அவைகளை நன்றாகப் பாதுகாத்து வைத்துள்ளார்களென்றும் நான் கேள்வியுற்றிருந்தேன். அவ்விடங்களுக்கு நேரிற் சென்று ஏட்டுச் சுவடிகளைக் கவனித்துப் பார்த்தால் சீவகசிந்தாமணிப் பிரதிகள் கிடைக்கலாமென்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆகவே ஒரு சமயம் ஏடு தேடும் யாத்திரையை மேற்கொண்டேன்.

திருநெல்வேலிப் பிரயாணம்

ஒரு நல்ல நாளிற் புறப்பட்டு நேரே திருநெல்வேலி சென்றேன். அங்கே சிலரைப் பார்த்து விட்டுத் திருக்குற்றாலத்துக்குப் போகும் வழியிலுள்ள மேலகரத்துக்குப் போனேன். சுப்பிரமணிய தேசிகர் உதித்தது அவ்வூரே. அங்கே அவருடைய இளைய சகோதரராகிய திரிகூட ராசப்பக் கவிராயர் இருந்தார். அவருடைய வீட்டிலுள்ள பழைய ஏடுகளைப் பார்த்ததில் சிந்தாமணிப் பிரதியொன்றும் கிடைக்கவில்லை. அங்கிருந்து திருக்குற்றாலம் சென்று திரிகூடாசலபதியைத் தரிசித்துக்கொண்டு செங்கோட்டைக்குப் போனேன்.